டெஸ்லாவின் சைபர்ட்ரக் விற்பனையில் பாரிய வீழ்ச்சி – எலோன் மஸ்க் எடுத்த நடவடிக்கை

கோடீஸ்வர வர்த்தகரான எலோன் மஸ்க்கின் டெஸ்லாவின் சைபர்ட்ரக் கார் விற்பனையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் டெஸ்லாவின் சைபர்ட்ரக் விற்பனை 63 சதவீதம் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் வெறும் 5,385 சைபர்ட்ரக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டில் இதுவரை விற்பனை செய்யப்பட்ட மொத்த சைபர்ட்ரக்களின் எண்ணிக்கை 16,000 ஆகும்.
இது ஆண்டுதோறும் 250,000 வாகனங்கள் விற்பனை செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பை விடவும் மிகக் குறைவாகும்.
2025 ஆம் ஆண்டிற்கான இலக்கு 50,000 ஆகக் குறைக்கப்பட்டாலும், நிறுவனம் தற்போது 20,000 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்யும் என்று எதிர்பார்க்கிறது.
விற்பனை சரிவுக்கு மத்தியில், எலோன் மஸ்க் தனது பிற தனியார் நிறுவனங்களான xAI மற்றும் SpaceX இற்கு அதிக அளவில் விற்கப்படாத சைபர்ட்ரக்குகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
வார இறுதியில் சைபர்ட்ரக்குகளை ஏற்றிச் செல்லும் பல லொறிகள் xAI அலுவலகங்களுக்கு சென்றதாகவும், மேலும் சில வாரங்களுக்கு முன்பு SpaceX நிறுவனத்திற்கும் சைபர்ட்ரக் வழங்கப்பட்டது.
மின்சார வாகன கொள்முதலுக்கான 7,500 டொலர் வரிச் சலுகை செப்டம்பர் 30 ஆம் திகதியுடன் காலாவதியாகியுள்ளது. இதனால் இந்த ஆண்டின் நான்காவது காலாண்டு இன்னும் சவாலானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.