மீண்டும் சிக்கலில் சிக்கிய டெஸ்லா – மீளப்பெறப்படும் 12000 வாகனங்கள்

அமெரிக்காவில் 12,000க்கும் அதிகமான கார்களை டெஸ்லா (Tesla) நிறுவனம் திரும்பப் பெறுவதாக தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் (NHTSA) அறிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டு Model 3 மற்றும் 2026ஆம் ஆண்டு Model Y வாகனங்கள் உட்பட 12,963 கார்கள் இவ்வாறு மீளப் பெறப்படுகின்றன.
பேட்டரி பேக் பாகத்தில் ஏற்பட்ட ஒரு குறைபாட்டின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டெஸ்லா அறிவித்துள்ளது.
இந்தக் குறைபாடு திடீரென ஓட்டுநர் சக்தியை (Driving Power) இழக்க வழிவகுக்கும். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என கட்டுப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பேட்டரி பேக்கை இலவசமாக மாற்றித் தருவதாக டெஸ்லா தெரிவித்துள்ளது.
இந்த நிலை தொடர்பான 36 உத்தரவாதக் கோரிக்கைகளையும் 26 கள அறிக்கைகளையும் நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது.
எனினும், இந்தக் குறைபாட்டால் விபத்துகள், காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என டெஸ்லா குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, டெஸ்லாவின் முழு சுய-ஓட்டுநர் அமைப்பு (Full Self-Driving System) பொருத்தப்பட்ட 2.88 மில்லியன் வாகனங்கள் மீது தொடர்ச்சியான விபத்துகள் குறித்த 50க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளுக்குப் பின்னர் நெடுஞ்சாலை நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியிருந்த நிலையில், இந்தத் திரும்பப் பெறுதல் அறிவிப்பு வந்துள்ளது.