மீண்டும் ஏலத்திற்கு வந்துள்ள பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமின் மும்பை சொத்துக்கள்
1993-ம் ஆண்டின் மும்பை தொடர் குண்டுவெடிப்பின் பின்னணியில் தேடப்படும் பயங்கரவாதியான தாவூத் இப்ராஹிமின் மும்பை சொத்துக்கள் மீண்டும் ஏலத்துக்கு வந்துள்ளன.
1993, மார்ச் 12 அன்று அப்போதைய பம்பாய் மாநகரம் தொடர் குண்டுவெடிப்புகள் காரணமாக குலுங்கியது. 257 உயிர்கள் பலியானதோடு, 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அப்போதைய மதிப்பில் சுமார் 27 கோடி ரூபாய்க்கான சொத்துக்கள் நாசமாயின.சிபிஐ மேற்கொண்ட விசாரணையில் அபும் சலீம் உள்ளிட்ட பல குற்றவாளிகள் தண்டனைக்கு ஆளானார்கள். குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு மூளையாய் செயல்பட்ட பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம் தப்பியோடி வளைகுடா நாடுகளிலும், இறுதியாக பாகிஸ்தானின் கராச்சியிலும் அடைக்கலாமானார்.
ஃபெமா சட்டத்தின் கடத்தல்காரர்களுக்கு எதிரான உப பிரிவின் கீழ், தாவூத்தின் சொத்துக்களை அரசு கையகப்படுத்தியது. மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் உள்ள தாவூத் இப்ராஹிமின் சிறுபிராயத்து வீடு மற்றும் 3 விவசாய நிலங்கள் உள்ளிட்டவை, ஜனவரி 5, வெள்ளியன்று ஏல நடவடிக்கைக்கு ஆளாகின்றன.
தாவூத் இப்ராஹிமின் பூர்வீக சொத்துக்கள் இதற்கு முன்னதாகவும் ஏலம் விடப்பட்டுள்ளன. இவ்வாறு தாவூத் இப்ராஹிம் குடும்பத்துக்கு சொந்தமான 11 சொத்துக்கள், கடந்த 9 ஆண்டுகளில் ஏலம் போயுள்ளன. ரூ3.53 கோடி மதிப்பிலான 6 பிளாட்டுகள், ரூ3.52 கோடி மதிப்பிலான விருந்தினர் மாளிகை, ரூ4.53 கோடி மதிப்பிலான உணவகம் ஆகியவை உட்பட பல்வேறு சொத்துக்கள் முடக்கப்பட்டு ஏல நடவடிக்கைக்கு ஆளாகி வருகின்றன.
கராச்சியில் தாவூத் இப்ராஹிம் பதுங்கியிருப்பினும், அதனை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்துள்ளது. மும்பை குண்டுவெடிப்பு வழக்கு விசாரணைக்காக தாவூத் இப்ராஹிமை இந்தியா கோரி வந்தபோதும், அவர் தங்கள் பாதுகாப்பில் இல்லை என்றே பாகிஸ்தான் சாதித்து வந்தது.கடந்த மாதம் தாவூத் உணவில் விசம் கலக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாகவும், அப்போது சிகிச்சை பலனின்றி அவர் இறந்துபோனதாகவும் தகவல் வெளியானது. எனினும் இணையத்தை முடக்கியதோடு, தாவூத் குறித்து வழக்கம்போல பாகிஸ்தான் மவுனமே சாதித்தது.