ஐவரைப் பலிவாங்கிய பயங்கரவாத தாக்குதல்: குர்திய பயங்கரவாதிகளுக்கு எதிராக துருக்கி நடவடிக்கை
துருக்கியத் தலைநகர் அங்காராவுக்கு அருகே உள்ள தற்காப்பு நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டனர்.அந்தத் தாக்குதலுக்குப் பின்னால் ஈராக், சிரியாவில் உள்ள குர்திய பயங்கரவாதிகள்தான் காரணம் என்று துருக்கி நம்புகிறது. அதனைத் தொடர்ந்து அந்நாடு, அவர்கள் மீது பதில் தாக்குதல்களை நடத்தியது.
டிஏஐ (TAI) நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டதுடன் மேலும் 22 பேர் காயமுற்றனர். அந்தத் தாக்குதலை சட்டவிரோதமான குழு என்று வகைப்படுத்தப்பட்ட குர்திய ஊழியர் கட்சி நடத்தியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று துருக்கிய அரசாங்கம் கூறியது.
அந்தத் தாக்குதலுக்கு சில மணிநேரம் கழித்து ஈராக், சிரியா ஆகிய நாடுகளின் வடக்குப் பகுதிகளில் பங்கரவாதிகள் இருக்கும் இடங்கள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக துருக்கிய பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
“பயங்கரவாதிகளுக்குக் சொந்தமான 32 இடங்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டன,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. நடவடிக்கை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
குர்திய ஊழியர் கட்சியை துருக்கியும் அதன் மேற்கத்தியப் பங்காளி நாடுகளும் பயங்கரவாதக் குழுவாக வகைப்படுத்தியுள்ளன. அக்குழு, பல ஆண்டுகளாக துருக்கிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
அங்காராவுக்கு சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள துருக்கிய அரசாங்கம் நடத்தும் டிஏஐ நிறுவனத்தின் தலைமையகத்துக்கு எதிராகத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. உள்ளூர் நேரப்படி புதன்கிழமை (அக்டோபர் 23) பிற்பகல் 3.30 மணிக்குப் பிறகு அங்கு பெரிய வெடிப்பு நேர்ந்தது.அச்சம்பவத்தை ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்று துருக்கிய உள்துறை அமைச்சர் அலி யெர்லிக்காயா உடனடியாக வகைப்படுத்தினார்.
ரஷ்யாவில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த துருக்கிய அதிபர் ரிசெப் தயிப் எர்துகான், தமது நாட்டின் செயல்பாட்டைக் குறிவைத்து தற்காப்புத் தொழில்துறை மீது நடத்தப்பட்ட தாக்குதல் அது என்று எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டார்.