கொரிய தீபகற்பத்தில் பதற்றங்கள் அதிகரிக்கும் : பியோங்யாங் எச்சரிக்கை!
வட கொரியாவின் வெளியுறவு அமைச்சகம், மாஸ்கோவுடனான பியோங்யாங்கின் உறவுகள் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனின் கருத்துக்களை சாடியுள்ளது.
இந்த கருத்துக்கள் தீபகற்பத்தில் “ஆபத்தான அரசியல் மற்றும் இராணுவ பதட்டத்தை மட்டுமே அதிகரிக்கும்” என்று கூறியது.
இந்த வார தொடக்கத்தில் ஜப்பானில் நடந்த G7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு பிளிங்கன் சியோலில் இருந்தார். தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் மற்றும் பிற உயர் அதிகாரிகளை சந்தித்தார்.
தென் கொரிய தலைநகருக்கான தனது விஜயத்தின் போது, பியாங்யாங்கிற்கும் மாஸ்கோவிற்கும் இடையிலான இராணுவ உறவுகள் “வளர்ந்து வருகின்றன என்றும் அவை ஆபத்தானவை” என்றும் கூறினார்.
மேலும் பியாங்யாங்கின் முக்கிய கூட்டாளியான பெய்ஜிங்கை அணு ஆயுதம் கொண்ட வடக்கைக் கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தினார்.
இந்நிலையில் பியோங்யாங் சனிக்கிழமையன்று பிளிங்கனைக் கண்டித்ததுடன், அவரது கருத்துக்கள் “பொறுப்பற்ற மற்றும் ஆத்திரமூட்டும்” நடவடிக்கை என விமர்சித்துள்ளது.