கம்போடியா எல்லையில் மீளவும் அதிகரிக்கும் பதற்றம் – வான்வழித் தாக்குதல்கள் ஆரம்பம்!
கம்போடியாவுடனான (Cambodia) சர்ச்சைக்குரிய எல்லை பகுதியில் தாய்லாந்து இராணுவத்தினர் இன்று வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக ஏபிசி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அமைதி திட்டத்தின் கீழ் இவ்விரு நாடுகளுக்கு இடையிலான பதற்ற நிலை முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் மீண்டும் தாக்குதல்கள் ஆரம்பமாகியுள்ளன.
கம்போடிய துருப்புக்கள் பல பகுதிகளில் தாய்லாந்து எல்லைக்குள் முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தாய் இராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் விந்தாய் சுவாரி (Winthai Suvaree) தெரிவித்துள்ளார்.
இதில் தாய்லாந்தின் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், நான்கு வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் கம்போடிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாலி சோச்சியாட்டா (Maly Socheata) , தாய்லாந்து இராணுவம் முதலில் கம்போடிய துருப்புக்களைத் தாக்கியதாக கூறியுள்ளார்.
அத்துடன் இன்றைய தினத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப தாக்குதல்களின் போது கம்போடியா பதிலடி கொடுக்கவில்லை என்று அவர் கூறினார்.
மேலும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அனைத்து விரோத நடவடிக்கைகளையும் தாய்லாந்து உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறாக இவ்விரு நாடுகள் இடையேயும் மீளவும் பதற்றமான சூழ்நிலை அதிகரித்து வருகின்றது.




