பிரேசிலில் கருப்பு சிலுவையுடன் வீதிகளில் இறங்கிய பல்லாயிரக்கணக்கான பெண்கள்!
பிரேசிலில் நேற்று பல்லாயிரக்கணக்கான பெண்கள் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
சமீபத்திய காலமாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அங்கு அதிகரித்துள்ள நிலையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய ரியோ டி ஜெனிரோ (Rio de Janeiro) , சாவ் பாலோ (Sao Paulo) மற்றும் பிற நகரங்களில் அனைத்து வயது பெண்களும் சில ஆண்களும் வீதிகளில் இறங்கி, பெண் கொலை, கற்பழிப்பு மற்றும் பெண் வெறுப்பை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருப்பு சிலுவைகளை கையில் ஏந்தியிருந்ததோடு, கருகலைப்புக்கான அணுகலையும் கோரியுள்ளனர்.
பிரேசிலில் மூன்றில் ஒரு பெண், ஒரு வருட காலப்பகுதியில் பாலியல் அல்லது பாலின அடிப்படையிலான வன்முறைக்கு ஆளாகியுள்ளதாக பிரேசிலிய பொதுப் பாதுகாப்பு மன்றத்தின் 2025 அறிக்கை தெரிவிக்கிறது.
இதற்கிடையில் ஒரு தசாப்தத்திற்கு இடையில் பிரேசிலில் பெண்களுக்கு ஆதரவாக சட்டம் ஒன்று இயற்றப்பட்டிருந்தது. இந்த சட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் பெண்கள் மீதான அவமதிப்பின் விளைவாக ஏற்படும் மரணங்கள் அனைத்து பெண் கொலை குற்றமாக கருதப்பட்டது.
இருப்பினும் கடந்த ஆண்டில் 1,492 பெண்கள் பெண் கொலைக்கு ஆளானார்கள், இது 2015 இல் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மிக உயர்ந்த எண்ணிக்கையாகும் என்று பிரேசிலிய பொதுப் பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது.




