தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி முதலமைச்சர் கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ராமேசுவரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையில் இந்த கைது நடவடிக்கை மீனவ குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது வரை 83 மீனவர்களும், 252 படகுகளும் இலங்கை வசம் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், அவர்களை விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.





