நியூயார்க் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு – 31 மணி நேரம் சிக்கி தவித்த பயணிகள்

ஸ்பெயினிலிருந்து நியூயார்க்கிற்கு புறப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில், நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் 282 பயணிகள் மற்றும் 13 பணியாளர்கள், மொத்தமாக 31 மணி நேரம் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நடுவானில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, விமானம் அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள போர்த்துகீசியா நாட்டின் அசோர்ஸ் தீவுகளின் லாஜஸ் விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது. விமானம் அங்கு பாதுகாப்பாக தரையிறங்கியதும், அனைத்து பயணிகளும் மற்றும் பணியாளர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
தற்போது வெளியான தகவல்களுக்கமைய, பயணிகள் அடுத்த நாள் வரை ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை டெல்டா நிறுவனம் ஏற்பாடு செய்தது.
மறுநாள் டெல்டா நிறுவனம் மாற்று விமானம் ஒன்றை அனுப்பியது. அந்த விமானம் நியூயார்க் ஜான் எப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது
இச்சம்பவம் தொடர்பாக டெல்டா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதில் நாங்கள் நன்றியுடன் இருக்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். பாதிக்கப்பட்ட பயணிகளுக்குச் சரியான இழப்பீடுகள் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.