மீண்டும் பேசவா?
அடுத்தவருடத்துக்குள் அதிகாரத்தை பகிர தயாராக இருக்கிறேன் என மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியன் 150 அவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கிழக்கு விஜயம் செய்தால் ஒருமாதிரி பேசுகிறார். வடக்குக்குப் போனால் பால்மணம் மாறாத பாலகன்போல் இன்னொன்றை பேசியிட்டு திரும்புகிறார்.
தென்னிலங்கை மக்களிடம் தான் ஒரு துட்டகாமினி தரம் குறையாத சிங்கள பௌத்தன் என்ற நடிப்பில் சக்கரவர்த்தியைப்போல் நடந்து கொள்கிறார். ஏன் இப்படி மாறி மாறி பேசுகிறார் யாரை திருப்திப்படுத்த இப்படி நாடகமாடுகிறார் என்பதை கண்டு கொள்ள முடியாமல் இருக்கிறது.
தமிழர்களின் நீண்டகால அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காண காத்திருக்கிறேன் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்று கூறும்போதெல்லம் அவர் ஒன்றை கூற மறந்துவிடுவதில்லை. “சகல தரப்பினருடனும், எல்லா கட்சி தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளேன் என்ற மந்திரத்தை அவர் உச்சரிக்க தவறுவதில்லை.
கடந்த 75 வருட கால இனப்பிரச்சனை தொடர்பில் நடத்தப்பட்ட உள்நாட்டு வெளி நாட்டு பேச்சு வார்த்தைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஒப்பந்தங்கள் வட்ட மேசை மகாநாடுகள் சர்வகட்சி கூட்டங்கள் கலந்துரையாடல்கள் வெளிநாட்டு தூதர் வருகைகள் தீர்வுத்திட்டங்கள் என எத்தனையோ அத்தனையும் பெறுமதியற்ற பூஜ்ஜியங்களாகவே போய்விட்டது.
2001 ஆம் ஆண்டு ரணில்விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றபோது அதாவது 2001 ஆம் ஆண்டு ரணில் விக்கிரம சிங்க தலைமையிலான கூட்டணி 109 உறுப்பினர்களை பெற்றுக்கொண்டதற்கு அமைய சில சிறுபான்மை கட்சிகளை இணைத்துக்கொண்டு சிறுபான்மையான அரசாங்கமொன்றை அமைத்து பிரதமரானார். பதவி ஏற்ற ரணில் 2004 ஆம் அண்டுவரை ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தார்.
ஏலவே 1994 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் நீண்ட கால இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணுவேன் என சிங்கள மக்களிடம் வாக்குப் பெற்று இரண்டாவது தடவையாகவும் (2000) ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்த திருமதி சந்திரிக்கா அம்மையார் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்துக்கொண்டிருந்தார். நடந்ததென்ன அம்மையாரால் பாராளு மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியல் தீர்வுப்பொதி ரணில் விக்கிரம சிங்காவினால் பாராளுமன்றுக்குள் வைத்து தீயிட்டு கொழுத்தப்பட்டது. தீர்வுத்திட்டம் கைவிடப்பட்டது. இதற்கு பின்னணி வகித்தவர்கள் ரணில் விக்கிரம சிங்க மஹிந்த ராஜபக்ஷ..
2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழர்கள் ஏமாந்த ஏமாற்றத்தைப்போல் வரலாற்றில் யாரும் ஏமாந்திருக்க முடியாது. கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார், முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பௌத்த குருமார் பலர் கைகோர்த்து மஹிந்த ராஜபக்ஷவை வீழ்த்தும் யுக்தியில் மைத்தரி பாலசிறி சேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியபோது ரணில் பிரதமராக்கப்பட்டார். அவர். அப்போது கூறியதை அப்படியே பிரதி ஆக்கம் செய்கிறேன்.
“2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்பட்டபோது எமது முதலாவதும், முக்கியமானதுமான வாக்குறுதியாக புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதுடன் புதிய அரசியல் அமைப்பின் மூலமாக தீர்வு மற்றும் ஜனநாயகம் பலப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டோம். அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் நாம் பின் நிற்கவில்லை. பாராளுமன்றத்தின் பூரண இணக்கத்துடனும் மக்கள் அங்கீகாரத்துடனும் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும்” என வாக்குறுதி அளித்திருந்தார்.
ஏலவே பாராளுமன்றத்தை அரசியல் அமைப்பு சபையாக மாற்றும் பிரேரணையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (9.1.2016) சமர்ப்பித்து அது பாராளமன்றத்தில் நிறைவேற்றவும் பட்டது. நிறைவேற்றப்பட்டதன்பின் என்ன தெரிவித்தார். “ஒற்றை ஆட்சி அமைப்பின் கீழேயே தமிழ் மக்களுக்கான தீர்வு முன்வைக்கப்படும் சமஷ்டி என்ற சொல்லுக்கே இடமில்லை ஒற்றை ஆட்சி அமைப்பின் மூலம் அதிகாரம் பகிர்ந்தளிப்பது பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டாலும் பெரும்பான்மை சிங்களவர்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே அது நடை முறைக்கு கொண்டுவரப்படுமென தெரிவித்திருந்தார்.
மட்டக்களப்பில் ஆற்றிய உரையில் அவர் குறிப்பிட்ட இன்னொரு விடயம் மாகண சபைகளுக்கு அதிகாரங்களை பகர்ந்தளிப்பதில் நான் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன் பொலீஸ் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அதிகாரங்கள் தொடர்பாக கவனம் செலுத்த முடியுமென தெரிவித்திருந்தார். 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் இந்தியாவின் அழுத்தம் காரணமாக கொண்டுவரப்பட்ட ஒரு சபைதான் மாகாண சபையாகும். இந்தியா தனத பிராந்திய நலன்பேணும் விதமாக இச்சபையை உருவாக்க அப்போதைய ஜனாதிபதி ஜெயவாத்தனாவுக்கு கடுமையான அழுத்தத்தை பிரயோகித்ததன் பலனே இந்த மாகாண சபைகளாகும்.
மாகாணசபைகளின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டவை அதுவுமன்றி அது ஒற்றையாட்சிக்குள் பகிரப்பட்ட அதிகாரங்கள். தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாஷைகளுக்கு இவ்வகை அதிகாரப்பகிர்வு போதுமானதல்ல எனவேதான் சமஷ்டி வடிவிலான அதிகார பகிர்வை பெற்றுத்தரவேண்டுமென இந்தியாவிடம் பல்வேறு சந்தர்ப்பங்களிலும், பேச்சுவார்த்தையின்போதும் கோரிக்கை விடப்பட்டு வந்தபோதும் அவை கவனத்தில் கொள்ளப்படவில்லை.
மண்குதிரையில் ஏறிக்கொண்ட இன்றைய ஜனாதிபதியோ வருட ஆரம்பத்தில் இரு தடவைகள் சர்வ கட்சி கூட்டத்தை நடத்திவிட்டு 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், இது தொடர்பில் நாம் முழுமையான கவனத்தை செலுத்தவேண்டும் எனவும் தனது ஆக்கிரோசமான கருத்தை தெரிவித்திருந்தார். இந்த முயற்சியை முன்னெடுக்கப்போவதாக கூறிக்கொண்டு தமிழ்த்தரப்பினருடனும் ஓரிரு சுற்று கலந்துரையாடல்களையும் நடத்தியிருந்தார்.
நடந்ததென்ன ஜனாதிபதியின் இந்த முன்னெடுப்புக்க எதிராக இலங்கையிலுள்ள பௌத்த பீடங்கள் கொம்பி எழுந்ததுடன் பௌத்த தேரர்கள் போராட்டங்களை முன்னெடுக்க முயற்சித்தனர். இந்த எதிர்ப்பு அலைகள் ஜனாதிபதியின் முன்னெடுப்புக்களுக்கு ஒரு இனவாத வேலியை போட முற்பட்டது. இதனால் அடக்கி வாசிக்க முற்பட்டார் ஜனாதிபதி.
மாகாண சபைகளுக்கான தே;தல் நடத்தப்ப்படவில்லை. எதிர்க்கட்சியினர் தொடக்கம் இந்திய ராஜதந்தரிகள்வரை தே;தலை நடத்தும்படி பல்வேறு ஆலோசனைகளையும் அதற்கு மேலாக அழுத்தங்களை பிரயோகித்தும் அது நடத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சில சபைகளின் ஆட்சிக்காலம் முடிந்து ஜந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டபோதும் அவற்றை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளப்படவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. அவ்வாறு இயங்கா நிலையில் ஊழல்களும் மோசடிகளும் நடப்பது மாத்திரமல்ல நிதி மோசடிகள் நிர்வாக குளறுபடிகள் இடம் பெற்று வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருவதுடன் சில மாகாண சபைகளின் ஆளுநர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் இடம் பெற்று வருகின்றன.
மாகாண பைகளை இயங்க வைப்பதன் மூலமே அவற்றுக்கான அதிகாரப்பகர்வு தொடர்பில் மக்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளை பெறமுடியம் அவ்வாறு இல்லாத நிலையில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை பகிர்ந்தளிக்கப்போவதாக ஜனாதிபதி கூறி தென்னிலங்கை மக்கள் மத்தியில் குழப்பத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும்.
பொலீஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய அதிகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வரமுடியுமென ஜனாதிபதியினால் கூறமுடியுமாயின் அதை காலம் தாழ்த்தாது செய்து முடிக்கவேண்டும்.காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு கையளிக்கப்படாத காரணத்தினாலையே குருந்தூர்மலை ஆதி ஐயனார் விவகாரம் திருகோணமலையில் இலுப்பை குள விகாரை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நீதி பதி ஒருவரை பதவி விலக வைத்து நாட்டுக்குகெட்ட பெயரை வாங்கித்தந்திருக்கிறது.. மாகாண சபையிடம் உரிய அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கமாயின் தொல்பொருள் திணைக்களத்தின் தலையீடோ வனபரிபலனத்தின் கெடுபிடிகளோ வராமல் தவிர்த்திருககலாம்.
1987 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு அமைய 9 ஆம் உருப்புரையின்படி அரசியல் யாப்பில் ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தத்துக்கு அமைய மூன்று பட்டியல்களில் அதிகாரம் பகிரப்பட்டது. ஆனால் அவற்றில் பல மீளப்பெறப்பட்டதன் காரணமாகவே மகாண சபைகளுக்கான அதிகாரங்கள் வலுவிளந்துபோய் மாகாண சபைகள் வெள்ளை யானைகள் ஆகிவிட்டன என்று விமர்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரம தமிழர்களின் பலத்தையும் ஒற்றுமையையும் சிதைப்பதற்கான சமயோசிதமாகவே 75 ஆவது சுதந்திரத்துக்கு முன்னர் தீர்வினை முன்வைக்கப்போவதாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து வைத்தார். அவரின் ராஜதந்திரத்தை கடந்த 21 வருடங்களுக்கு மேலாக தெரிந்தும் தெரியாததுபோல் செயற்பட்ட தமிழ்த்தரப்பினர் பேச்சுவார்த்தைக்கு சென்று மீண்டும் தோல்வி கண்டார்கள். பேச்சுவார்த்தை தோல்வி கண்டமைக்கான காரணம் கூட்டமைபின் கையாலாகத்தனம் என 20 வருடங்களுக்கு மேலாக செயற்பட்டு வந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் சிதறிடித்துவிட்டார்கள். தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் ரணிலோடு பேச முற்படும்போது கற்றுக் கொண்ட பாடங்களை தமிழத்தரப்பினர் மறந்து விடக்கூடாது. ஆனை தனது வஞ்சத்தை ஆயிரம் வருடம் சென்றாலும் மறக்காது என்ற எங்கள் வேட்டை மன்னர்களின் அனுபவத்தை ஏன் மறந்தார்களோ தெரியாது. தேர்தல் வெற்றியை முன்னிறுத்தும் எந்த பேச்சுவார்த்தையிலும் தமிழர் தரப்;பு சிக்கிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது தமி;ழ் தலைமைகளின் தலையாய கடன்.
இறுதியுத்தத்தின்போது இடம்பெற்ற யுத்தக்குற்றம், மனிதவுரிமை மீறல்கள், கடத்தப்பட்டோர் கையளிக்கப்பட்டோர் தொடர்பான ஒரு சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை 2012 ஆம் ஆண்டு முதல் முன்வைக்கப்பட்டு வந்திருக்கும் நிலையில் 2019 அம் அண்டு இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகவும் சர்வதேச விசாரணை தேவையென்ற கோரிக்கையும் அழுத்தமும் பிரயோகிக்கப்பட்டு வருகிறபோதும,;. அதுபற்றி இலங்கை அரசாங்கம் தொடர்ந்து தனது மறுப்பை தெரிவித்துக்கொண்டே வருகிறது.
இலங்கையில் 4 பேர் மீது துப்பாக்கிச் சூடு – இருவர் பலி – உயிருக்கு போராடும் இருவர்
Trending
இலங்கையில் 4 பேர் மீது துப்பாக்கிச் சூடு – இருவர் பலி – உயிருக்கு போராடும் இருவர்
கடந்தவாரம் ஜேர்மன் நாட்டுக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்வி “இலங்கையில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருக்கிறதே தங்கள் அபிப்பிராயம் என்ன” என ஊடகவியாலாளர் வினவியபோது அதற்குப்பதில் அளித்த ஜனாதிபதி,
இலங்கை அரசாங்கம் எந்தவொரு பிரச்சனை தொடர்பிலும் சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்காது. அமெரிக்க புலனாய்வு பிரிவின் அறிக்கையில் வெளிநபர்கள் எவரும் தலையிடவில்லை.என தெரிவிக்கப்படுகிறது. மேலைத்தேய ஊடகங்கள் எம்மை தவறானவர்கள் என எண்ணுகின்றன. எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் அது தொடர்பில் சர்வதேச விசாரணைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்காது அனுமதிக்காது. என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இலங்கையிலுள்ள பிரச்சனைகளுக்கு இலங்கைக்குள்ளேயே தீர்வு காணப்படும்.பிரித்தானியா, ஜேர்மன் போன்ற நாடுகள் தமது பிரச்சனைகள் தொடர்பில் ஏன் சர்வதேச விசாரணைக்கு செல்லவில்லை.அவ்வாறு இருக்கையில் இலங்கைக்கு மாத்திரம் ஏன் அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது. நீங்கள் எம்மை இரண்டாம் தரத்தினர் என எண்ணிக் கொண்டிருக்கறீர்கள்” என ஜனாதிபதி காட்டமாக பதில் அளித்துள்ளார்.
ஜனாதிபதியின் பதிலில் இருக்கும் உண்மை என்னவென்றால் போர்க்குற்றமாக இருக்கலாம், மனிதவுரிமை மீறல்களாக இருக்கலாம்,.காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளாக இருக்கலாம் அல்லது இறுதி யுத்தத்தின்போது உறவினர்களால் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள் விபரங்களை வெளிக் கொண்டு வருவதாக இருக்கலாம்.மாறாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலாக இருக்கலாம் எந்த ஒரு விவகாரத்துக்கும் சர்வதேச விசாரணை நடத்தப்படமாட்டாது நடத்துவதற்க அனுமதியில்லை என்பதை அடித்துக் கூறியிருக்கிறார்.
அவரின் முன்னாள் ஜனாதிபதி மஹிநத ராஜபக்ஷ தோரணையில் அளித்த பதிலானது இரண்டு விடயங்களை மிக தெளிவாக வலியுறுத்தி காட்டுகிறது இலங்கை விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிட முடியாது. சிறுபான்மை சமூகத்தவராக இருக்கலாம், அன்றி தமிழ் தலைவர்களாக இருக்கலாம் நாம் கூறுவதையே அவர்கள் கேட்கவேண்டும். அந்த எல்லையை தாண்ட இந்நாட்டில் இடமில்லை என்பதாகும்.
“இந்த விவகாரம் தொடர்பாக வெளிநாட்டு விசாரணைகளை கோரும் அதிகாரம் யாருக்கம் கிடையாது. என்னால் சனல் 4 விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நீதிபதி ஒருவர் தலைமையில் சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரும், முன்னாள் விமானப்படை தளபதியுமான நபர் உள்ளிட்ட குழுவொன்று அமைக்கப்பட்டிருக்கிறது அதுவுமன்றி பாராளுமன்ற குழுவொன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. அமைக்கப்பட்ட ஆணைக்குழுவால் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனில் பாராளுமன்றகுழு அதனை முன்னெடுத்துசெல்லும் பாராளுமன்றமே இறுதித்தீர்மானம் எடுக்குமென இடக்கு முடக்காக பதில் அளித்துள்ளார்.
இந்த பதில் தொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகராவும் மக்கள் இத்தகைய பதில்களையே எதிர்பார்க்கிறார்கள் என கைதட்டி வரவேற்றிரக்கிறார்கள்.
இறுதி யுத்தத்தின்போது நடத்தப்பட்ட போர்க்குற்றம் மனிதவுரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், கைளிக்கப்பட்டோர் தொடர்பான குற்றமிழைப்புக்கு இலங்கை அரசாங்கம் அல்லது சம்மந்தப்பட்டவர்கள் பொறுப்புக்கூறவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் 2012 ஆம் ஆண்டு இலங்கைக்க எதிராக அமெரிக்காவால் கொண்டுவப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டபோது இலங்கை அரசாங்கம் பிச்சை எடுப்பதுபோல் அந்த தீர்மானத்திலிருந்த தப்பிக் கொள்வதற்காக உலக நாடுகளின் காலில் விழுந்து தம்மை காப்பாற்றுப்படி மன்றாடியதை இன்னும் மறந்துவிட முடியாது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும் தாமதிக்கும் நீதியானது அதனை இழப்பதற்கு சமமானது, யுத்தத்தின்போது இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள் தொடாபில் உள்ளக விசாரணைகளை நடத்தி நீதி வழங்கமாறு சர்வதேசம் இலங்கைக்கு அவகாசம் வழங்கியபோதும், ஆனால் உள்ளக விசாரணைப்பொறி முறையைக்கூட உரிய முறையில் நடை முறைப்படுத்த அரசாங்கம் தயாராக இல்லாத நிலையிலையே இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் பாரப்படுத்தவேண்டும் என்றும் சர்வதேச விசாரணையை துரிதப்படுத்தவேண்டுமென்றும் பல்வேறு கோரிக்கைகள் தீவிரம் அடைந்து கொண்டது.
போர்க்குற்றம், மனிதவுரிமை மீறல்கள,; இனப்படுகொலைகள,; கணக்கில் அடங்காக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மேலும் பல குற்றச் செயல்கள் மற’றும் கட்டளை இடும் தரப்பினர் செய்த குற்றுங்கள் ஆகியவற்றை சாதாரண நீதி மன்றங்களில் விசாரணை செய்ய முடியாது புதிய சட்ட விதி தண்டனை வழங்கும் முறை கொண்ட அதி உயர் நீதி மன்றத்தில் இக்குற்றங்கள் விசாரிக்கப்படவேண்டும். அவ்வாறானதொரு நீதி மன்றமே அமைக்கப்படவேண்டும்.அதற்குரிய நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகளின் உறுப்ப நாடுகள் விரைந்து எடுக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் 2015 ஆம் ஆண்டு கூட்டத்தொடரில் விசாரணைக்குழு பரிந்தரை செய்தபோதும் அதை இலங்கை வன்மையாக கண்டித்தது. ஏற்க மறுத்தது.
இதேபோன்றே 2017 ஆம் ஆண்டு நடை பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றங்கள் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள் சட்டத்தரணிகள் மற்றும் விசாரணை ஆளர்கள் உள்ளடங்கிய கலப்பு நீதி மன்றம் ஒன்றை அமைத்து விசாரணை நடத்தவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை அலுவலகம் வெளியிட்ட விசாரணை அறிக்கையில் பரிந்தரை செய்யப்பட்டிருந்தது.
குரூரமான பாலியல் வன் முறைகள், நீதிக்கு புறம்பான கொலைகள் குற்றம் இழைத்தவாக்கு தண்டனையில்லை சரண் அடைந்த பலரை காணவில்லை வெள்ளை வான் கடத்தல்கள் போன்ற மனிதவுரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் இடம் பெற்றதாக கருதி இந்த கலப்பு நீமன்றை அமைத்து விசாரணைப்படுத்துங்கள் என்று பரிந்துரைத்தபோதும் இலங்கை அரசாங்கம் அதை கண்டு கொள்ளவுமில்லை கவனத்தில் எடுத்துக் கொள்ளவுமில்லை. 2021 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை 22 நாடுகளின் அதரவுடன் நிறைவேற்றப்பட்டபோதும் பிரேரணையை நிறைவேற்ற இலங்கை உடன்படவில்லை.
இவ்வாறானதொரு சூழ்நிஜலையில் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க எக்காரம் கொண்டும் சர்வதேச விசாரணைக்குழுவை இலங்கையில் நான் அனுமதிக்கப்போவதில்லை ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவை தீர்;மானங்களை நாம் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என சவால் விடுத்திருக்கிறார். இதே நேரத்தில் கடந்த இரண்டுவருடங்களுக்கு மேலாக கொவிட் 19 தாக்கம், தீவிரமான பொருளாதார நெருக்கடிகள், டொலர் பிரச்சனை, எரிபொருள் இன்மை, விலைகளின் விலையேற்றம், வரிசைக்கொடுமைகள், மின்சார கட்டண அதிகரிப்புக்கள் என ஏகப்பட்ட நெருக்கடிகளை இலங்கை அரசு சந்தித்தது. இந்த இக்கெட்டான சூழ்நிலையில் தான் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை மக்கள் போராட்டங்கள் பதவி துறுக்கவைத்து, நாட்டை விட்டு ஓட வைத்தமையும் பிரதமர் மஹிந்தவை பதவி துறந்து அஞ்சாத வாசம் இருந்த அதிசயங்களும் நடந்தன.
எல்லாவற்றுக்கும் அப்பால் 2019 ஆம் ஆண்டு உயிhத்த ஞாயிறு தாக்குதல் இலங்கை மக்களை புரட்டிப்போட்டது. அவ்வாறு புரட்டிப்போட்டபோதும் முறையான விசாரணைகளை நடத்தி ஜனாதிபதி கோத்தா நீதி வழங்க நட வடிக்கை எடுக்காத நிலையில் கோத்தா கோ கோம் என்ற புரட்சி வெடித்தது. இது புரட்சியாக கருதப்படவிட்டாலும் மக்கள் கொந்தளிப்பாகவே பேசப்பட்டது. .இக்கொந்தளிப்பு நாட்டின் தவைரையே கதி கலங்கவைத்தது என்பது ஒருவகையில் உண்மைதான். இந்த வால்வெள்ளிக் கெடுதியால் ஒரு ஆசனத்தைகூட வென்றெடுக்கமுடியாமல் படுதோல்வி கண்ட ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் குருச்சந்திரயோகம் அடித்ததன் காரணமாக பிரதமர் குதிரையில் ஏறி ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்துகொண்டார்.
அமர்ந்து கொண்டவர் தமிழ் மக்களை போக்குக்காட்ட சுதந்திர தினத்துக்கு முன் தமிழர்களுக்கான தீர்வு, பொங்கலுக்குமுன் தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிடுமென றீல் சுத்தினாரே தமிழ் மக்களின் நீண்ட காலப்போராட்டத்துக்கு திர்வு காணும் நடவடிக்கையையும் எடுக்க முயற்சிக்கவில்லை. உயிர்த்த ஞாயிற்று அழிவுக்கான உண்மையை கண்டறிய நடவடிக்கையை மேற்கொள்ளவுமில்லை.
13 ஆவது திருத்தத்தை முழுமைப்படுத்துவேன் காணி அதிகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தலாமென்று தமிழ் தலைமைகளுக்கு போக்குக்காட்டி மறுபக்கம் பௌத்த பீடங்களையும் பிக்குமாரையும் 13 திருத்த சட்த்தத்துக்கு எதிராக உசுப்பேற்றி விட்டதுதான் அவரின் ராஜதந்திரமாக இருந்தது. இதனால் இலங்கையிலுள்ள பௌத்த பீடங்கள் அனைத்தும் போர்க்கொடி தூக்கி 13 ஆவது திருத்தம் வேண்டாம் என்று ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடும் அளவுக்கு நிலமை சிக்கலாக்கப்பட்டது..தற்போது தமிழ் மக்கள் தீர்வு தொடர்பாகவோ 13 ஆவது திருத்தம் தொடர்பாகவோ எந்த எத்தனிப்பையும் முன்னெடுப்பதாக தெரியவில்லை.
தற்போது ஜனாதிபதி என்ன கூறுகிறார் என்றால் சர்வதேசம் தன்னை வற்புறுத்த முடியாது ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவை தீர்மானங்களை நிராகரிப்பதாகவும், கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் தன்னை ஆட்சிக்கு கொண்டுவந்து அழகு பார்ப்பவர்கள் மேற்குலத்தவரல்ல என கடுந்தொனியில் கூறியிருக்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது. ஜனாதிபதி ரணில் எதையும் செய்ய முயற்சிக்கப்போவதில்லை பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதைபோல் எல்லாமே மந்தம் ஆகிவிடப்போகிறது என்பதுதான் உண்மை.
கடந்த செவ்வாய்க்கிழமை பிரித்தானியாவின உயர் ஸ்தானிகர் அன்ட்ரூ பற்றழக் மரியாதையின் நிமித்தம் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினருமாகிய இரா. சம்பந்தனை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடியபோது சம்பந்தன் தனது கவலையை இவ்வாறு கொட்டித்தீர்த்திருக்கிறார்.
“இன்றைய நிலையிலும் தமிழர்கள் தோற்றுப்போனவர்களாகவே காணப்படுகிறோம் ஜனாதிபதியால் வாக்குறுதி அளிக்கப்பட்ட எந்தவொரு விடயமும் நிறைவேறுவதாக தெரியவில்லை இன்னும் நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டேயிருக்கிறோ”மென சம்பந்தன் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக வருடங்கள் ஓடியதே தவிர உண்மை கண்டறியப்படவில்லை. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் எந்த வழிகளும் திறக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய பரிகாரங்கள் வழங்கப்படவில்லை இவ்வாறான தொரு சூழ்நிலையில் தான் சனல் 4 காணொளி பல அதிர்ச்சியான தகவல்களை வெளிக்கொண்டுவந்திருந்தும் அது பற்றி ஜனாதிபதியோ பாராளுமன்றோ அதிக கரிசனை கொண்டதாக தெரியவில்லை. ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்ற குழவை கண்டறிய நியமித்துவிட்டேன் மூவர் அடங்கிய ஆணைக்குழுவென்றை அமைத்திருக்கிறேன் என தன் சமாளிப்பை வெளிக்காட்டியிருக்கிறார்.
எனவே இந்த நாட்டில் பல ஆணைக்குழுக்கள் பல்வேறு சந்தாப்பங்களில் அமைக்கப்பட்டபோதும் அவற்றின் அறிக்கைகள் எந்த உண்மையையும் வெளிக்கொண்டுவரவில்லை உரியவர்களுக்கு தண்டனை வழங்கப்படவுமில்லை. உதாரணமாக 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் உண்மையை கண்டறியவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும் முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்தனா அவர்களால் சன்ஷோனி கமிஸன் என்ற ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. மிக நீண்ட காலமாக பகிரங்கப்படுத்தப்படாமல் இருந்த அறிக்கையான பரணகம அறிக்கை மற்றும் உடலகம அறிக்க நல்லாட்சி அரசாங்க காலத்தில் (2015) பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
அவற்றுக்கு என்ன நடந்தது இதுவரை என்று எவருக்குமே தெரியாது. யுத்தம் முடிவடைந்து அடுத்தடுத்த வருடம் (2011) கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அது பற்றி சகல தரப்பினரும் மறந்து போய் விட்டோம். ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்பதுபோல் எல்லாமே மறக்கப்படும் மறக்கப்படவேண்டிய சூத்திரத்திலும் ஆணைக்குழுக்களும், அறிக்கைகளும,; உண்டாக்கப்படும் போது ஜனாதிபதி தற்போது நியமித்திருக்கும் குழுவினாலும் பாராளுமன்ற குழுவினாலும் ஏதும் நடக்கப்போவதில்லை என்பதை பரிந்து கொண்டதனால் என்னவோ இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித குலத்துக்கே இழுக்கை உண்டாக்ககிய குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவையென தமிழ்த்தரப்பினர் கோரிக்கை விடுத்து விருகிறார்கள். புலம்பெயர் சமூகம் அழுத்தங்களை பிரயோகித்து வருகிறார்கள்.இதே நேரம் காணாமல் ஆக்கப்பட்டொரின் உறவினர்களும் சர்வதேச விசாரணையை கோரிவருவதை காணுகிறோம். அதேபோன்றே
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட அதிர்ச்சியான தகவல்களைத் தொடர்ந்து கொழும்பு பேராயர் மல்கம் ஆண்டகை அவர்கள் ஞாயிறு தாக்கதல் தொடாபில் உண்மை கண்டறியப்படவேண்டுமாயின் சர்வதேச விசாரணையே தேவை என்பதை மிக அழுத்தமான கோரிக்கையாக முன் வைத்திருந்தார் என்பது இங்கு கவனத்துக்குரிய செய்தியாகும்.
இவை அனைத்தும் இன்றைய நாட்டின் நிலமைகளை படம்பிடித்து காட்டுவதாக இருந்தாலும் ஜனாதிபதி அவர்கள் திடீரென விஸ்வரூபம் எடுத்து சர்வதேச விசாரணையை அனுமதிக்கப்போவத்ல்லை என கூறியிருப்பது சிங்கள் மக்கள் மத்தியிலும் ராஜபக்ஷ குடும்பத்தரரிடமும் நல்லபெயர் எடுப்பது மாத்திரமன்றி எனது மாமனார் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும்தான் பின் பற்றுகிறேன் என்பதை நிரூபிப்பதற்காகவே இந்த வேஷத்தை போடத் தொடங்கியிருக்கிறார் என்பது வெளிப்படையாகவே தெரிய வருகிறது.
நன்றி – அக்னியன்