ஆப்கானில் பெண்களுக்கு எதிராக தலிபான்கள் விதித்துள்ள புது தடை!
ஆண்கள் இல்லாமல் பெண்கள் கார்களில் பயணம் செய்ய கூடாது என்று தாலிபான்கள் கடுமையான கட்டுப்பாட்டை விதித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து அங்கு அடுக்கடுக்கான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்து வருகின்றனர்.
அதனடிப்படையில் பெண்கள் கல்வி கற்கவும், உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லவும், நீச்சல் குளங்களுக்கு செல்லவும் தடை விதித்து உத்தரவிட்டனர்.மேலும் சமீபத்தில் கூட பெண்கள் அழகு நிலையங்கள் நடத்த தாலிபான்கள் தடை விதித்து உத்தரவிட்டனர், இதன்மூலம் பெண்கள் பலர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தாலிபான்கள் பெண்களுக்கு எதிரான மற்றொரு புதிய கட்டுப்பாடு ஒன்றையும் விதித்துள்ளனர். இந்த கட்டுப்பாட்டின் படி, இனி ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஆண்கள் துணை இல்லாமல் தனியாக கார்களில் செல்ல கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.மேலும் கார்களில் பெண்கள் செல்லும் போது கட்டாயமாக புர்கா உடை அணிந்து வர வேண்டும் என்றும் தாலிபான்கள் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே பெண்கள் கல்வி கற்ற கூடாது என்ற தாலிபான்களின் கட்டுப்பாடுகள் அங்குள்ள பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், தாலிபான்களின் இந்த புதிய உத்தரவு மேலும் கூடுதல் அதிர்ச்சியை ஆப்கானிஸ்தான் பெண்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.