குஜராத்தில் காசாவிற்கு நிதி திரட்டி தவறாக பயன்படுத்திய சிரிய நபர் கைது

போரினால் பாதிக்கப்பட்ட காசாவின் ஏழை மக்களுக்கு உதவுவதற்காக குஜராத்தில் உள்ள மசூதிகளில் இருந்து நிதி திரட்டிய சிரிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது மூன்று சக நாட்டவர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும் நகர காவல்துறை தெரிவித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவரும் அவரது கூட்டாளிகளும் காசா பாதிக்கப்பட்டவர்களின் பெயரில் சேகரிக்கப்பட்ட பணத்தை அவர்களின் ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எல்லிஸ் பிரிட்ஜ் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து 23 வயது அலி மேகத் அல்-அசார் கைது செய்யப்பட்டதாக குற்றப்பிரிவு இணை காவல் ஆணையர் ஷரத் சிங்கால் தெரிவித்தார்.
அதே ஹோட்டலில் தங்கியிருந்த சந்தேகத்திற்குரிய சிரியர்கள் ஜகாரியா ஹைதம் அல்சார், அகமது அல்ஹபாஷ் மற்றும் யூசெப் அல்-ஜஹார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
“ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில், டமாஸ்கஸைச் சேர்ந்த அல்-அசார் என்பவரை நாங்கள் கைது செய்தோம். அவரிடம் இருந்து 3,600 அமெரிக்க டாலர்கள் மற்றும் ரூ.25,000 ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்ட பிறகு மற்ற மூவரும் தலைமறைவாகினர்,” என்று ஷரத் சிங்கால் குறிப்பிட்டுள்ளார்.