மாரடைப்பு வருவதற்கு முன்பே தென்படும் அறிகுறிகள்..!

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால், பெரும்பாலான மக்கள் இதய நோய்களுக்கு ஆளாகின்றனர். அண்மைக் காலமாக மாரடைப்பு மூலமாக ஏற்படும் உயிரிழப்புகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகின்றன. ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில், இளைஞர்கள் கூட மாரடைப்பால் தங்கள் உயிரை இழக்கின்றனர். இதற்கு பல காரணிகள் சொல்லப்படுகிறது.
ஆனால், மாரடைப்பு வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பே, மாரடைப்பு வருபவருக்கான உடலில் அறிகுறிகள் தோன்றத் தொடங்குகின்றன. அவற்றை சரியான நேரத்தில் அடையாளம் காண்பதன் மூலம், நோயாளியின் உயிரைக் காப்பாற்ற முடியும். மாரடைப்பு வருவதற்கு 30 நாட்களுக்கு முன்பு என்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை இங்கே பார்க்கலாம்.
நெஞ்சு வலி :
மாரடைப்பு வருவதற்கு முன்பு, நோயாளிக்கு மார்பு வலி ஏற்படக்கூடும். இந்த நிலையில் நோயாளி மார்பைச் சுற்றி அழுத்தம் மற்றும் கனத்தை உணரலாம். சில நேரங்களில் கைகள், தோள்கள் மற்றும் தாடையிலும் வலி இருக்கலாம். உங்களுக்கு மார்பு, தோள்பட்டை மற்றும் தாடையிலும் வலி இருந்தால், இந்த அறிகுறியை நீங்கள் புறக்கணிக்கக்கூடாது. உடனடியாக மருத்துவரை அணுகவும்.
சோர்வு மற்றும் பலவீனம் :
மாரடைப்பு வருவதற்கு முன்பு, ஒருவர் உடலில் சோர்வு மற்றும் பலவீனத்தை உணர்வார். எந்த வேலையும் செய்யாமல் நீங்கள் எப்போதும் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்ந்தால், அதைப் புறக்கணிக்கக்கூடாது. இதுகுறித்து நீங்கள் உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி உடலை பரிசோதித்துக் கொள்ளவும்.
தலைச்சுற்றல் :
மாரடைப்பு ஏற்படுவதற்கு 30 நாட்களுக்கு முன்பு நோயாளிக்கு மீண்டும் மீண்டும் தலைச்சுற்றல் ஏற்படும். சில சமயங்களில், மயக்கம் வருவது போலவும் உணரலாம். இந்த நேரத்தில், மூச்சுத் திணறல், தலைவலி மற்றும் இரத்த ஓட்டம் குறைவதால் இப்படி ஏற்படும். இப்படியான அறிகுறிகள் தென்பட்டால் நீங்கள் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
சுவாசிப்பதில் சிரமம் :
மாரடைப்பு வருவதற்கு முன்பு, ஒருவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். லேசான வேலை செய்தால் கூட நீங்கள் மிகவும் சோர்வடைந்தால் அல்லது மூச்சுத் திணறல் ஏற்பட்டால், அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். உங்கள் உடலில் இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
மாரடைப்பை தவிர்க்கும் வழிமுறைகள் :
1. ஆரோக்கியமான உணவு முறை: கொழுப்பு குறைந்த உணவுகள்: கொழுப்பு குறைந்த உணவுகளை உண்ணுங்கள். சிவப்பு இறைச்சி, வெண்ணெய், மற்றும் பால்பொருட்களில் உள்ள நிறைவுற்ற கொழுப்புகளைத் தவிர்க்கவும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மற்றும் பருப்பு வகைகளை அதிகம் உண்ணுங்கள். உப்பு மற்றும் சர்க்கரை பயன்பாட்டைக் குறைக்கவும்.
2. உடல் பயிற்சி : வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான ஏரோபிக் பயிற்சிகளான நடைபயிற்சி, ஜாகிங், சைக்கிள் ஓட்டுதல் செய்யவும். உங்கள் உடல் எடையை ஆரோக்கியமான வரம்புகளுக்குள் வைத்திருங்கள். உடல் பருமன் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும். புகைப்பழக்கம் இரத்தக் குழாய்களை சேதப்படுத்தி மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும். புகைப்பழக்கத்தை நிறுத்துங்கள். மது அருந்துவதை தவிர்க்கவும். மன அழுத்தம் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும். யோகா, தியானம் ஆகியவற்றை செய்யவும்.