வெளிநாடு செல்லும் இலங்கை பட்டதாரிகள் தொடர்பில் ஆய்வில் வெளியான தகவல்

இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறும் மாணவர்களில் 50 வீதத்துக்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேறி, மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அதுகோரல மற்றும் லக்ஷ்மன் குமார ஆகியோரால் நடத்தப்பட்ட தொடர்ச்சியான ஆய்வில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
சில சந்தர்ப்பங்களில், விஞ்ஞானம் சார்ந்த பட்டப்படிப்புகளைப் படிக்கும் அனைத்து மாணவர்களும் நாட்டை விட்டு வெளியேறி, திரும்பி வருவதில்லை என ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
தற்போது அரச பல்கலைக்கழகங்களில் சுமார் 142,000 இளங்கலை மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
அவர்களில் 25 வீதமானோர் கலைப் பிரிவிலும், 20 வீதமானோர் முகாமைத்துவம் மற்றும் வணிகப் பிரிவிலும், 13 வீதமானோர் பொறியியல் பிரிவிலும் மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதாரம் ஆகியவற்றில் 10 வீதமானோரும் மற்றும் விவசாயம் மற்றும் கணினி விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளில் 11 வீதமானோரும் கல்வி கற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் சமீப காலங்களில் ஆண்டுதோறும் தேசிய பல்கலைக்கழகங்களுக்குச் சுமார் 44,000 மாணவர்கள் உள்வாங்கப்படுகின்றனர்.