டயானாவின் பிரிட்டிஷ் குடியுரிமை குறித்து உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் இந்த மேன்முறையீட்டு மனுவை சமர்ப்பித்திருந்தார்.
காமினி அமரசேகர, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது, பிரதிவாதியான இராஜாங்க அமைச்சர் டயானா கமகே சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி சவீந்திர பெர்னாண்டோ, மூன்று அடிப்படை ஆட்சேபனைகளை நீதிமன்றில் முன்வைத்தார்.
ஜனாதிபதியின் சட்டத்தரணி சவீந்திர பெர்னாண்டோ தனது ஆட்சேபனைகளில், மனுதாரருக்கு இந்த மனுவை சமர்ப்பிக்கும் சட்ட தகுதி இல்லை என்றும், மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு சரியானது என்றும், இந்த மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்ட விதம் உச்ச நீதிமன்ற விதிகளுக்கு முரணானது என்றும் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், இந்த ஆட்சேபனைகளை விசாரணையின் போது முன்வைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் சட்டத்தரணிக்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் அறிவித்து மனு விசாரணையை ஆரம்பித்தது.
மனுதாரர் ஓஷல ஹேரத் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஹபீல் பாரிஸ், பிரித்தானிய பிரஜையான இராஜாங்க அமைச்சர் இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு அமருவது சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது என நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மனு மீதான அடுத்தக்கட்ட விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.