கடலில் மூழ்கிய பிலிப்பைன்ஸ் கப்பலால் மணிலாவுக்கு எண்ணெய்க் கசிவு அபாயம்; ஒருவர் மாயம்
பிலிப்பைன்ஸ் கடல் பரப்பில் மோசமானப் பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 25) எண்ணெய்க் கப்பல் ஒன்று மூழ்கியதால் பெரிய அளவில் எண்ணெய்க் கசிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தச் சம்பவத்தில் காணாமல் போன ஒரு கப்பல் ஊழியரை கடலோரக் காவல் படையினர் தேடி வருகின்றனர்.
“எம்டி டெர்ரா நோவா எனும் கப்பலில் இருந்த 16 ஊழியர்களும் காப்பாற்றப்பட்டுவிட்டனர். ஒருவர் மட்டும் காணவில்லை,” என்று சம்பவத்தைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய பிலிப்பீன்ஸ் போக்குவரத்து அமைச்சர் ஜெய்ம் பாட்டிஸ்டா தெரிவித்தார்.
மணிலாவுக்குத் தெற்கே பாடான் மாவட்டத்தில் லிமே கடலோர நகரத்துக்கு அருகே அந்த எண்ணெய்க் கப்பல் மூழ்கியது.“ஏற்கெனவே எண்ணெய்க் கசிவை பார்க்க முடிகிறது. பெரிய அலைகளுடன் பலத்த காற்று வீசுவதால் அங்கு மீட்பாளர்களை அனுப்ப முடியவில்லை,” என்றார் அவர்.
அந்தக் கப்பலில் தொழிற்துறைக்குத் தேவையான 1.4 மில்லியன் லிட்டர் எண்ணெய் ஏற்றப்பட்டிருந்தது. மோசமான கடல் அலையில் சிக்கியதால் அது கவிழ்ந்தது.
பிலிப்பீன்ஸ் கடலோரக் காவல் படையின் பேச்சாளரான ரியர் அட்மிரல் அர்மாண்டோ பாலிலோ, காணமல் போனவரைத் தேடி மீட்கவும் எண்ணெய்க் கசிவைக் கட்டுப்படுத்தவும் கடலோரக் காவல்படையின் பெரிய கப்பல் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
கடலோரக் காவல்படை ஆகாயவழி ஆய்வு செய்ததில் எண்ணெய்க் கசிவு மூன்று கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பரவியிருப்பதையும் கடல் அலையால் அடித்துச் செல்லப்படுவதையும் காண முடிகிறது.“நேரம் சென்றுகொண்டே இருக்கிறது. எங்களால் முடிந்த சிறந்தவற்றை செய்வோம்,” என்று ரியர் அட்மிரல் பாலிலோ சொன்னார்.
தலைநகர் மணிலாவுக்கு அருகே எண்ணெய்க் கப்பல் மூழ்கியதால் விரைவில் கசிவு நகரை வந்தடையும் அபாயம் இருப்பதாகவும் அவர் கூறினார்.இதற்கிடையே அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர், இழப்பீட்டை மதிப்பீடு செய்யும்படி சுற்றுப்புற அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.