வடமேற்கு பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்; 12 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர்.உயிரிழந்தோரில் ஏழு சிறுவர்களும் அடங்குவர் என்று பாகிஸ்தானியக் காவல்துறையும் மீட்புப் பணிப் பிரிவும் தெரிவித்தன.
இந்தத் தாக்குதல் செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) நிகழ்ந்தது.
ராணுவத் தளத்திற்குள் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனங்களை இருவர் ஓட்டிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.வாகனங்களில் நிரப்பப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் அருகில் இருந்த பள்ளிவாசலின் கூரை இடிந்து விழுந்தது.
அப்போதுதான் அப்பகுதியைச் சேர்ந்த பலர் அந்தப் பள்ளிவாசலில் நோன்பு துறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.அருகில் இருந்த சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது என்று பெயர் குறிப்பிட விரும்பாத ராணுவ அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
வெடிப்புக்குப் பிறகு மேலும் பல போராளிகள் ராணுவத் தளத்துக்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது.ஆனால் ராணுவத் தளத்துக்குள் நுழைய அவர்கள் மேற்கொண்ட முயற்சியைப் பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர்.ஆறு போராளிகளைப் பாகிஸ்தானிய பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
தற்கொலைத் தாக்குதலில் 30 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.வெடிப்பின் காரணமாக கட்டடங்களும் சுவர்களும் இடிந்து விழுந்ததில் அவர்கள் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.இடிப்பாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்போரைத் தேடும் பணியில் மீட்புப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பாகிஸ்தானியப் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்று பாகிஸ்தானிய அதிகாரிகள் கூறினர்.