இலங்கையில் மின் கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு!
மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான உரிய தரவுகள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி பெப்ரவரி முதல் வாரத்தில் மின்சாரக் கட்டணம் திருத்தம் செய்யப்படும் எனவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.
புதிய உற்பத்தித் திட்டத்தின்படி, 2024 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து கிட்டத்தட்ட 600 மெகாவாட் மின்சாரம் பெறப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சோலார் பேனல்கள் அமைக்கும் பணியும் நமது அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 10 மெகாவாட்டிற்கு குறைவான திட்டங்களுக்கு விரைவான திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்க்கிறோம்.
மன்னார், புனரீன் மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்களுக்கான பல பெரிய திட்டங்கள் உற்பத்தித் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. நீர் மின்சாரம், சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்வதன் மூலம் மின்சார கட்டணத்தை குறைக்கவும் நாங்கள் இலக்கு வைத்துள்ளோம்.
மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான உரிய தரவுகள் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டுள்ளன. இம்மாத இறுதி அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் மின் கட்டணம் குறைக்கப்படும். மேலும் 2024 ஆம் ஆண்டில் நாம் எதிர்பார்க்கும் இலக்குகளை நோக்கி நகர்வதே எங்களின் நோக்கமாகும்.
தற்போது, மின் வாரியத்திற்கு புதிய பணியாளர்கள் ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட்டுள்ளது.மேலும், பணித்திறனுக்கு ஏற்ப, பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதிகள் அப்படியே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.