இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டுக்கு சர்வதேச மாநாட்டில் பாராட்டு!
மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் தொடர்பான சர்வதேச மாநாட்டில் இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு பாராட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் (ICCG) ஏப்ரல் 29 முதல் மே 1 வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் 130 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலுக்கான ஜெனீவா சர்வதேச மையம் (GICHD) மற்றும் ஐக்கிய நாடுகளின் கண்ணிவெடி நடவடிக்கைக்கான ஒருங்கிணைந்த ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
எதிர்வரும் மூன்று வருடங்களில் கண்ணிவெடிகள் அற்ற நாடாக இலங்கையை மாற்றுவதே அரசாங்கத்தின் விருப்பம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் 3,000 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதிகளில் இன்னும் 23 சதுர கிலோமீற்றர்கள் மாத்திரமே அகற்றப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலுக்காக ஜெனிவா சர்வதேச மையத்தின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
Hallo Trust, MAG, Sharp மற்றும் DASH ஆகிய அமைப்புகளுடன் இணைந்து இலங்கை இராணுவம் இந்த பணிகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.
அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜப்பான், அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து மற்றும் நோர்வே போன்ற நாடுகள் இதற்கு நிதியுதவி அளித்து வருவதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
04 பிரதான இடைக்கால கலந்துரையாடல்களை உள்ளடக்கிய இந்த மாநாட்டில் இலங்கையின் தலைமையில் 01 கலந்துரையாடல் மாநாடு நடைபெற்றதும் விசேடமாகும்.