மியான்மரில் சைபர் கிரிமினல் ஏரியாவில் சிக்கியுள்ள இலங்கையர்கள்!!! அடித்து கொடுமைப்படுத்துவதாக தகவல்
மியான்மரில் தாய்லாந்து எல்லைக்கு அருகில் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சைபர் கிரிமினல் ஏரியா எனப்படும் பகுதியில் அமைந்துள்ள முகாம்களில் இலங்கையர்கள் குழுவொன்று பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைவிலங்கிடப்பட்டு தண்டனைக்காக இருட்டு அறை என அழைக்கப்படும் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு இலங்கையர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இரு இலங்கையர்கள் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட பயங்கரவாத முகாமில் உள்ள இலங்கைப் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேபாளம் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அந்தந்த நாடுகளால் அவ்வப்போது மீட்கப்பட்டு வருவதால், தாம் உள்ளிட்ட இலங்கையர்களை மீட்குமாறு அதிகாரிகளிடம் அவர் கேட்டுக்கொள்கிறார்.
இதேவேளை, மியன்மாரில் உள்ள இணைய அடிமை முகாம்களுக்கு இலங்கையர்களை ஆள் கடத்தலை வழிநடத்திய பிரதான சந்தேகநபரான சீனர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தகக் கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் தொடர்புடைய மூன்று இலங்கையர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட பிரிவு தெரிவித்துள்ளது.