இலங்கையில் படையினரை அதிரடியாக குறைக்கும் அரசாங்கம்
இலங்கையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 135,000 ஆக குறைக்கும் நடவடிக்கையில் இலங்கை ஈடுபட்டுள்ளது.
தற்போதுள்ள 200,783 இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை ஏற்கனவே கிட்டத்தட்ட 150,000 ஆக குறைந்துள்ளது.
இலங்கை இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்காக குறைத்து இந்த ஆண்டுக்குள் 135,000 ஆகவும், 2030க்குள் 100,000 ஆகவும் குறைக்கப்படும் என கடந்த ஆண்டு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமிதா பண்டார தென்னகோன் அறிவித்திருந்தார்.
2030 ஆம் ஆண்டிற்குள் தொழில்நுட்ப ரீதியாகவும் தந்திரோபாய ரீதியாகவும் நன்கு சமநிலையான பாதுகாப்புப் படையை உருவாக்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று அவர் கூறினார்.
மேலும், 2030 ஆம் ஆண்டளவில் இலங்கை விமானப்படை வீரர்கள் மற்றும் இலங்கை கடற்படை வீரர்களின் எண்ணிக்கையை தலா 35,000 ஆக பராமரிக்க இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
இலங்கை இராணுவம் ஆட்சேர்ப்புகளை நிறுத்தியுள்ளதாகவும், பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் அத்தியாவசிய பிரிவுகளுக்கு மாத்திரம் ஆட்சேர்ப்பு செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது சில மாதங்களில் சுமார் 35,000 இராணுவ வீரர்களைக் குறைக்க வழிவகுத்தது.
இதேவேளை, இலங்கை விமானப்படையில் 30,000க்கும் குறைவாகவர்களே இருப்பதாக விமானப்படை பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையில் தற்போது 40,000 பேர் உள்ளனர் என கடற்படைப் பேச்சாளர் கயான் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
“எங்கள் ஆட்சேர்ப்பை நாங்கள் தொடர்கிறோம், ஏனெனில் ஆட்சேர்ப்பு இல்லாமல் எங்களால் செயல்பட முடியாது. ஓய்வுபெறும் எண்ணுக்கும் ஆட்சேர்ப்பு எண்ணுக்கும் வித்தியாசம் உள்ளது. அதற்கமைய, எண்ணிக்கை குறையும். எங்கள் பணியாளர்களை நாங்கள் எவ்வாறு பராமரிக்கிறோம் என்பது குறித்து எங்களிடம் திட்டங்கள் உள்ளன” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சுகாதாரம், மின்சாரம் மற்றும் துறைமுகங்கள் உட்பட பல துறைகளில் அடிக்கடி வேலைநிறுத்தங்கள் ஏற்படும்.
வேலைநிறுத்தம் தொடரும் போதிலும் நாடு சுமூகமாக இயங்குவதை உறுதி செய்வதற்காக முப்படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.