இலங்கை: பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக புதியவரை நியமிக்கக் கோரிக்கை!
பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் பதவிக்கு உரிய அதிகாரியொருவரை சட்டரீதியாக நியமிக்குமாறு, இலங்கை கல்வி நிர்வாக சேவை நிபுணர்கள் சங்கம் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரியுள்ளது.
ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு 6 மாத சேவை நீடிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த காலம், அடுத்த மாதம் நிறைவடையவுள்ளதாகவும் அந்த சங்கம் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
தற்போது, பதவியில் உள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு சேவை நீட்டிப்பு வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், அவ்வாறான நடவடிக்கைகளுக்கு இலங்கை கல்வி நிர்வாக சேவை நிபுணர்கள் சங்கம் எதிர்ப்பினை வெளியிடும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், குறித்த பதவிக்கு அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் உள்ளதாகவும், அந்தப் பதவிக்கு நிரந்தர அடிப்படையில் உரிய அதிகாரியை நியமிக்க வேண்டும் என இலங்கை கல்வி நிர்வாக சேவை நிபுணர்கள் சங்கம் கல்வியமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவை வலியுறுத்தியுள்ளது.