இலங்கை: 15 மில்லியன் பெறுமதியான இரத்தினக்கல் கொள்ளை – பிக்கு உட்பட 10 பேர் கைது
மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்கல பிரதேசத்தில் கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
வேனில் வந்த சந்தேகநபர்கள் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை கட்டிப்போட்டு ரொக்கம் மற்றும் 15 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான இரத்தினக்கல் உட்பட 60 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரிகளால் சந்தேகநபர்களை கண்காணித்து, ஏழு துண்டுகளாக பிரிக்கப்பட்டு காலியில் ஒரு இடத்தில் விற்பனை செய்யப்பட்ட மாணிக்கக் கல்லை மீட்க முடிந்தது.
மாவத்தகம பிரதேசத்தில் உள்ள விகாரையைச் சேர்ந்த பிக்கு ஒருவர் உட்பட 10 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். முதலில் வங்கிக் கொள்ளையடிக்கத் திட்டமிட்ட கும்பல், அதைச் செயல்படுத்த முடியாமல், விலைமதிப்பற்ற ரத்தினத்தை அறிந்ததும் வீட்டைக் குறிவைத்தது தெரியவந்தது.
திருடப்பட்ட தங்க நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களில் பெரும்பாலானவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். மீதம் உள்ள பணத்தை மீட்கவும், மேலும் இருவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.