இலங்கை தேர்தல் – பசிலின் கோரிக்கையை கண்டுகொள்ளாத ரணில்
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தமது கட்சி இன்னமும் நம்புவதாகவும் ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மாறுபட்ட நிலைப்பாடு இருப்பதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் நாடாளுமன்றக் குழுவில் பேசிய பசில், இது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அவர் ஜனாதிபதியை சந்தித்து சமீபத்திய அரசியல் முன்னேற்றங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தகவலுக்கமைய, அரசியலமைப்பிற்கமைய, இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, பொதுத் தேர்தலை நடத்துவதற்கு நியாயமான எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் காத்திருக்கின்றனர்.
அடுத்த நாடாளுமன்ற தேர்தல் 2025ஆம் ஆண்டு நடத்துவதற்கே காலப்பகுதி குறிக்க்பபட்டுள்ளது. எனினும் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்து, விரைவான தேர்தலை அறிவிப்பதற்கு ஜனாதிபதிக்கு அரசியலமைப்பு அதிகாரம் உள்ளது.
எந்தத் தேர்தலாக இருந்தாலும், அதற்குத் தயாராகுங்கள் என உறுப்பினர்களுக்கு பசில் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
முதலில் வரக்கூடிய எந்தவொரு தேர்தலுக்கும் தயாராகும் வகையில் அரசியல் பணிகளை தொடங்குமாறு உறுப்பினர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேவேளை, அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.