இலங்கை மீண்டெழ தொடர்கிறது டில்லியின் உதவி: சிறப்பு விமானமும் அனுப்பி வைப்பு!
பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்காக இந்தியா சகல வழிகளிலும் உதவி வருகின்றது.
அந்தவகையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப்பணிகளில் ஈடுபடுவதற்காக, இந்திய விமானப்படையின் எம்ஐ-17 உலங்குவானூர்தி, இன்று முற்பகல் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை வந்தடைந்தது.
சாகர் பந்து நடவடிக்கைக்காக முன்னர் பயன்படுத்தப்பட்ட இரண்டு எம்ஐ-17 உலங்குவானூர்திகள் அத்தியாவசிய பராமரிப்புக்காக இந்தியாவுக்குத் திரும்பிய நிலையில், இந்த உலங்குவானூர்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இன்று வந்த உலங்குவானுர்தியில் 14 பேர் கொண்ட இந்திய விமானப்படை குழு வந்துள்ளது. இது இலங்கை விமானப்படையினருடன் இணைந்து தொடர்ச்சியான நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்தியாவிலிருந்து பேரிடர் நிவாரண உதவிகளை ஏற்றிக் கொண்டு, மற்றொரு விமானம் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இந்திய விமானப்படையின் மிகப்பெரிய சரக்கு விமானமான ஊ-17 விமானத்தில் 110 அடி நீளம் கொண்ட 63 மெட்ரிக் தொன் பெய்லி பாலம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று இந்திய தூதரகத்தின் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





