முத்துராஜா யானைக்கு சிகிச்சையளிக்க விசேட குழு தாய்லாந்து பயணம்!
இலங்கையிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட முத்துராஜா என்ற யானைக்கு சிகிச்சையளிக்கும் பணியில் இணைந்து கொள்வதற்காக, தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் வைத்தியர்கள் குழாம் ஒன்று தாய்லாந்துக்கு சென்றுள்ளது.
தாய்லாந்து அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்தக் குழாம் அந்த நாட்டுக்கு பயணமாகியுள்ளது.
இந்தக் குழாமில் விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் விலங்குகள் நலப் பணிப்பாளரான கால்நடை வைத்தியர் சந்தன ராஜபக்ஷ, கால்நடை வைத்தியர் மதுஷா பெரேரா மற்றும் சிரேஷ்ட விலங்குகள் பாதுகாவலர் நந்துன் அத்துலத்முதலி உள்ளிட்டோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்துராஜா யானை 2001 ஆம் ஆண்டு தாய்லாந்து அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அதற்கிணங்க, சுமார் 22 வருடங்களாக முத்துராஜா யானை அளுத்கம கந்தே விஹாரையின் பொறுப்பிலிருந்தது.
அழகிய தந்தங்களை கொண்ட முத்துராஜா யானையின் உடல்நிலை மோசமடைந்து வருவதால் அதனை மீளவும் தமது நாட்டிற்கு அழைத்துச் செல்வதாக தாய்லாந்து அரசு அறிவித்திருந்தது.
அதன்படி முத்துராஜா யானை கடந்த ஜூலை மாதம் 02ஆம் திகதி தாய்லாந்து நோக்கி அழைத்து செல்லப்பட்டது.