சுற்றுலாத்துறை மேம்பாடு குறித்து விசேட கலந்துரையாடல்!
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி, அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (26) முற்பகல் கூடியது.
தற்போதைய உலகளாவிய வலுசக்தி நெருக்கடிக்கு மத்தியில் இந்நாட்டின் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டன.
சுற்றுலாத்துறையில் உள்ளவர்களுக்கு தடையின்றி எரிபொருளை வழங்குவது மற்றும் தொழில்துறையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஆதரவை வழங்கும் திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை, ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்கின்ற இடங்களை முறையாகப் பராமரித்தல் மற்றும் போர்ச் சூழல் இல்லாத நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைப்பதற்கான திட்டங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பேர வாவியை சுத்தம் செய்யும் பணிகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
திரைப்பட சுற்றுலாத் துறையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.





