சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல் களம் : போட்டிப்போடும் அமைச்சர்கள்!
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில், ஆளும் மற்றும் எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
தீர்மானத்தை தோற்கடிக்க ஆளும் தரப்பும், அதனை வெற்றிபெற எதிர்கட்சியும் மேற்கொண்ட முயற்சியினால் இந்த சூடான சூழல் ஏற்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்காக அரசாங்கத்தினால் விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் பிரேரணையை வெற்றிகொள்வதற்காக எதிர்க்கட்சிகள் தற்போது பலமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக எதிர்வரும் வாரத்தில் ஆளும் கட்சி எம்.பி.க்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்கட்சி அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அடுத்த வாரம் கொழும்பில் தங்குவதற்கு தீர்மானித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்வதற்காக ஆளும் கட்சி மற்றும் ஏனைய குழுக்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இரகசிய கலந்துரையாடல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, சுகாதார அமைச்சர் பதவிகளைப் பெறுவதற்கு அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரியவருகிறது.