மோசடி வழக்கில் சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் கைது
ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சிங்கப்பூர் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து, விசாரணை முடியும் வரை அவரை அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சர் மற்றும் கோடீஸ்வர தொழிலதிபர் ஓங் பெங் மீதும் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
ஊழலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக சிங்கப்பூரில் அமைச்சர் ஒருவருக்கு அதிக சம்பளம் வழங்கப்படுவதாகவும், அப்படியானால் அமைச்சர் ஒருவர் ஊழலில் ஈடுபடுவதை மன்னிக்கவே முடியாது என்றும் ஊழல் புலனாய்வுப் பணியகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டதன் பின்னர், விசாரணைகள் நிறைவடையும் வரை அமைச்சரை பிணையில் விடுவிக்க ஊழல் புலனாய்வுப் பணியகம் ஏற்பாடு செய்துள்ளதுடன் அவரது கடவுச்சீட்டை பணியகம் கையகப்படுத்தியுள்ளது.
ஊழல் தொடர்பான விசாரணைக்கு போக்குவரத்து அமைச்சர் ஆதரவு அளித்ததாகவும், அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகவும் சிங்கப்பூர் ஊழல் புலனாய்வுப் பிரிவு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.
கடந்த 5ஆம் திகதி ஊழல் விசாரணைப் பணியகம் அந்நாட்டு பிரதமர் லீ சியாங் லாங்கிற்கு, ஊழல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரனிடம் விசாரணை நடத்த விரும்புவதாக அறிவித்தது.
கோரிக்கையை அனுமதித்த பிரதமர், எதிர்வரும் 6ஆம் திகதி போக்குவரத்து அமைச்சரிடம் விசாரணை நடத்த ஊழல் புலனாய்வுப் பிரிவினருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் லீ சியாங் லாங் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 5ஆம் தேதி ஊழல் புலனாய்வுப் பிரிவினரால் போக்குவரத்து அமைச்சரிடம் விசாரணை நடத்தக் கோரி விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், விசாரணை முடியும் வரை கட்டாய விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், மூத்த இராஜாங்க அமைச்சர் சீ ஹாங் டாட், போக்குவரத்து துறையின் தற்காலிக அமைச்சராக செயல்படுவார் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
விசாரணை முடியும் வரை அவரை அனைத்து பதவிகள் மற்றும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்குமாறு அந்நாட்டு அரசுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.