இலங்கையில் குழந்தைகளின் ஊட்டச்சத்து தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்
நாடளாவிய ரீதியில் 15,763 சிறுவர்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுதான் இந்தக் குழு அடையாளம் காணப்பட்டதாக குடும்ப சுகாதாரப் பணியகம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு ஒரு கணக்கெடுப்பை நடத்தியிருந்தனர்.
இந்த கணக்கெடுப்பில் குறித்த விடயம் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மதிப்பீட்டு மற்றும் ஒழுங்குமுறை திணைக்களத்தின் நிபுணரான வைத்தியர் கௌசல்யா கஸ்தூரியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதன்படி, கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்பில் அதிகளவான ஊட்டச்சத்து குறைபாடுள்ள சிறுவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இவ்வருடம் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு 15.3 சதவீதமாக இருந்த எடை குறைந்த குழந்தைகளின் சதவீதம் இந்த ஆண்டு 17 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், எடை குறைந்த தாய்மார்கள் மற்றும் இரத்த சோகை தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் 14.5 வீதமாக இருந்த குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 15 வீதமாக அதிகரித்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.