10 வயது பிரிட்டிஷ்-பாகிஸ்தானிய சிறுமி கொலை வழக்கில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்
10 வயது நிரம்பிய பிரிட்டிஷ்-பாகிஸ்தானிய சிறுமியின் கொலை தொடர்பாக சிறுமியின் மூன்று குடும்ப உறுப்பினர்கள் மீதான வழக்கில் சிறுமி அனுபவித்த கொடூரமான துன்புறுத்தல் குறித்த அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்துள்ளன.
சாரா ஷரிஃப் என்ற அந்தச் சிறுமி 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தென் இங்கிலாந்திலுள்ள வோக்கிங் பகுதியில் உள்ள தமது குடும்பத்தார் வீட்டுப் படுக்கை ஒன்றில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். சிறுமியின் உடல் முழுக்க எலும்பு முறிவுகள், கடிகள், தீக்காயங்கள் ஆகியவை இருந்தன.
சிறுமியைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களைத் தேடும் படலம் தொடங்கியது. சாராவின் உடன்பிறப்புகளுடன் அவர்கள் முந்தைய தினமே பாகிஸ்தானுக்குத் தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
சாராவின் தந்தையான 42 வயது உர்ஃபான் ஷரிஃப், மாற்றான் தாயான பெய்னாஷ் பட்டூல்(30), மாமா ஃபைசால் மாலிக்(29) ஆகிய மூவரும் செப்டம்பர் 2023ல் மீண்டும் பிரிட்டனுக்குத் திரும்பினர். இவ்வாண்டு அக்டோபர் நடுப்பகுதியிலிருந்து அவர்கள் மீதான வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுத்துள்ளனர்.
சாராவுக்கு மொத்தம் 25 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. கழுத்தை ஒருவர் நெரித்துள்ளதற்கான அறிகுறியும் இருந்தது.கடித்ததற்கான தழும்புகள் உட்பட பல்வேறு காயங்கள் சாராவின் உடலில் காணப்பட்டன. கிரிக்கெட் மட்டை, இடைவார் போன்றவற்றில் சிறுமியின் மரபணு காணப்பட்டது.
சாராவின் தலையை மூடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு பையில் அவரின் ரத்தம் இருந்தது.
மரியாதையின்றி, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாரா நடந்துகொண்டதால் ஷரிஃப் சிறுமியை அடிப்பதாக பட்டூல் பல ஆண்டுகளாக அவரின் சகோதரிக்கு வாட்ஸ்அப் அனுப்பியுள்ளதை நீதிமன்றம் அறிந்தது. அடையாளம் தெரியாத வகையில் சாரா காயமுற்றிருப்பதாகவும் ஒரு குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டது.
வழக்கு விசாரணை அடுத்த வாரம் தொடர்கிறது.