செந்தில் பாலாஜியின் கைது சட்ட விரோதமானது: நீதிமன்றத்தில் வாதம்
கடந்த 13ம் திகதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்ட விரோதமானது என்று அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை சார்பில் செந்தில் பாலாஜி சட்டப்படி கைது செய்யப்பட்டார். அவர் மீதான ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நிஷாபானு, பரத சக்ரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் சட்டத்தரணி என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதாடினார்.
அவரது தரப்பில், செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 1.39 மணிக்கு கைது செய்யப்பட்டதை காலை 8.12 மணிக்கு தான் தெரிவித்துள்ளார்கள்.
கைது மெமோவில் கையெழுத்திட செந்தில் பாலாஜி மறுத்ததாக எந்த பதிவும் இல்லை. சட்ட விரோதமான கைது நடவடிக்கையை செஷன்ஸ் நீதிமன்றம் பரிசீலிக்காமல் இயந்திரத்தனமாக ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும் ஒருவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் வாதிட்டார்.