‘வாய்ப்பைப் பயன்படுத்தி காஸா போரை நிறுத்தவும்’ – இஸ்ரேலுக்கு பிளிங்கன் அறிவுறுத்தல்
ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரின் மரணம், ஹமாஸ் அமைப்பின் ஆற்றலில் பெரும்பான்மை இழப்பு ஆகியவற்றால் அமைந்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு காஸா போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வருமாறு இஸ்ரேலுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அறிவுறுத்தியுள்ளார்.
காஸாவில் இஸ்ரேல் போர் தொடுத்ததற்குக் காரணமான 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி தாக்குதல் மீண்டும் ஏற்படும் சாத்தியத்தை இஸ்ரேல் வெற்றிகரமாகத் தகர்த்துள்ளது என்றார் பிளிங்கன்.
இந்நிலையில், பிணைக்கைதிகளான 101 இஸ்ரேலிய, வெளிநாட்டவரை மீண்டும் தாய்நாட்டிக்குக் கொண்டு வந்து போரை நிறுத்துவதில் இஸ்ரேல் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.
“அந்த வெற்றிகளை நீடித்த உத்திபூர்வ வெற்றியாக மாற்றும் தருணம் இதுவே,” என்று ரியாத் செல்வதற்குமுன் செய்தியாளர்களிடம் கூறினார் பிளிங்கன்.
இஸ்ரேலிய இயக்கத்தால் காஸா நிலைகுலைந்து போயுள்ளது. மக்கள் பலரும் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறித் தற்காலிகத் தங்குமிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
போதுமான மனிதநேய உதவிப் பொருள்கள் மோசமான நிலையில் வாழும் மக்களைச் சென்றடைய இஸ்ரேல் மேலும் அதிக முயற்சி எடுக்க வேண்டும் என்றும் திரு பிளிங்கன் தெரிவித்தார்.