இஸ்ரேல் அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்; ஆஸ்திரேலியாவில் அனைத்துலக ஐஸ் ஹாக்கி போட்டி ரத்து
பாதுகாப்புக் காரணங்களால் திட்டமிடப்பட்டிருந்த அனைத்துலகத் தகுதிச்சுற்றுப் போட்டியை ரத்துசெய்துள்ளதாக ஆஸ்திரேலியாவின் ஐஸ் ஹாக்கி சம்மேளனம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) கூறியுள்ளது.அந்த முடிவுக்கும், இஸ்ரேலிய தேசியக் குழு போட்டியில் பங்கெடுப்பதற்கும் தொடர்பு இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
இஸ்ரேலின் பங்கெடுப்பினால் பாதுகாப்புக் காரணங்களால் போட்டியை நடத்தமுடியாது என்று ‘ஐஸ் ஹாக்கி ஆஸ்திரேலியா’, அனைத்துலக ஐஸ் ஹாக்கி சம்மேளனத்திடம் அனுப்பிய மின்னஞ்சலை உள்ளூர் ஊடகங்கள் சுட்டின.
உள்ளூர் காவல்துறையிடம் ஆலோசனை நடத்திய பிறகு, மெல்பர்னில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த அந்தப் போட்டியை ரத்துசெய்ய முடிவெடுத்துள்ளதாக ‘ஐஸ் ஹாக்கி ஆஸ்திரேலியா’ அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
அந்த அறிக்கையில், இஸ்ரேல் குறிப்பிடப்படவில்லை. விளையாட்டுக்கு வெளியே உள்ள உலக விவகாரங்கள் குறித்து தன்னால் கருத்து தெரிவிக்க முடியாது என்று அது குறிப்பிட்டது.
“விளையாட்டாளர்கள், தொண்டூழியர்கள், பார்வையாளர்கள், மற்ற பங்கேற்பாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிசெய்ய, அந்த முடிவு முக்கியமாக எடுக்கப்பட்டது,” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.இதன் தொடர்பில் கருத்துக் கேட்க ராய்ட்டர்ஸ் முன்வைத்த கோரிக்கைக்குச் சம்மேளனம் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.
அண்மைய மாதங்களில் யூதர்களுக்கு எதிராக நடந்த தொடர் தாக்குதல்களை அடுத்து, போட்டி ரத்துசெய்யப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை, சிட்னியில் கார் ஒன்றில் நாசவேலை செய்யப்பட்ட சம்பவமும் அவற்றில் அடங்கும்.
மெல்பர்னில் யூதர்களின் வழிபாட்டுத் தலத்தில் தீவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்ற மாதம் ஆஸ்திரேலியா யூதர்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கையாள பணிக்குழு ஒன்றை அமைத்தது. அது அநேகமாகப் பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கக்கூடும் என்று காவல்துறையினர் கூறினர்.
இந்நிலையில், போட்டி ரத்துசெய்யப்பட்டது வருந்தத்தக்கது என்றாலும் ஆஸ்திரேலியாவில் உள்ள யூதர்களைக் காப்பாற்ற அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் கூறினார்.