நிரப்பிய பெற்றோலிற்கு பணம் கேட்ட பங்க் மேனேஜருக்கு அரிவாள் வெட்டு: வாலிபர்களுக்கு வலைவீச்சு!
வாகனத்திற்கு நிரப்பிய பெட்ரோலுக்கு பணம் கேட்ட மேனேஜரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை நகரில் இருந்து வேலூர் செல்லும் வழியில் உள்ளது ஓம்சக்தி நகர். இங்கு தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இதில் நேற்று இரவு இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு இளைஞர்கள் பெட்ரோல் போட்டுள்ளனர்.அப்போது, பெட்ரோல் பம்பு ஆபரேட்டர் பணம் கேட்டுள்ளார். அதற்கு அந்த 4 பேரும் பணத்தை இவர், அவர் கொடுப்பார் என மாறி, மாறி ஒருவரையொருவர் கை காட்டியுள்ளனர். இதனால், அங்கிருந்த பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும், இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அங்கு பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
இதனைப் பார்த்த பங்க் மேனேஜர் ரகுராமன், தனது அறையில் இருந்து வெளியே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் மேனேஜரை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்ததாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் தனது நண்பர்களுடன் பெட்ரோல் பங்குக்கு அரிவாளுடன் வந்த இளைஞர்கள், மேனேஜர் ரகுராமனை சரமாரியாக வெட்டினர். இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, உடனடியாக அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், சிCCTV காட்சியைக் கைப்பற்றி தப்பியோடிய இளைஞர்களை வலைவீசித் தேடி வருகின்றனர். பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் பங்க் மேனேஜரை அரிவாளால் இளைஞர்கள் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.