சந்திரன் தொடர்பில் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு – ஆக்ஸிஜனேற்றப்பட்ட தாதுக்கள் உறுதி
சந்திரனின் மேற்பரப்பில் ஆக்ஸிஜன் உள்ளமையை உறுதிப்படுத்தும் வகையிலான தாதுக்களைச் சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆக்ஸிஜனேற்றம் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் இரும்பு ஆக்ஸைடு தாதுக்களைக் கண்டுபிடித்தமையானது, சந்திரன் குறித்த ஆய்வில் குறிப்பிடத்தக்க விடயம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் சாங்’இ-6 (Chang’e-6) விண்கலம் மூலம் சேகரிக்கப்பட்ட, 3,000 மில்லிகிராம் எடை கொண்ட சந்திர மாதிரிகளை ஆய்வு செய்ததன் மூலம் இந்தத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்திர மாதிரிகளை எலக்ட்ரான் நுண்ணோக்கி (Electron Microscope) மூலம் பகுப்பாய்வு செய்தபோது, அவற்றில் ஹெமடைட் (Hematite), மேக்மைட் (Maghemite) போன்ற இரும்பு ஆக்ஸைடு தாதுக்கள் இருந்ததாக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சந்திரனுக்குப் பாதுகாப்பு வளிமண்டலம் இல்லாததாலும், தண்ணீர் இல்லாத சூழல் நிலவுவதாலும், சந்திரனில் ஆக்ஸிஜனேற்றப்படுத்தப்பட்ட தாதுக்கள் உருவாக வாய்ப்பில்லை என முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன. இதுவரை சந்திரனில் இரும்பு துருப்பிடிக்காது என்றே கருதப்பட்டது. எனினும், இந்தப் புதிய கண்டுபிடிப்பின் மூலம் அதுதொடர்பான நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சந்திரனின் மேற்பரப்பில் ஏற்படும் விண்கற்கள் மோதல்களால் இந்தத் தாதுக்கள் உருவாகியிருக்கலாம். இந்த ஆக்ஸைடுகள் தென் துருவ காந்த முரண்பாடுகளுக்கு (Magnetic Anomalies) காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சந்திரன் தொடர்பான எதிர்கால ஆய்வு நடவடிக்கைகளுக்கு இந்த கண்டுபிடிப்பு ஒரு பலமான ஆதாரமாக இருக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





