திருகோணமலையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள சரோஜா வேலைத்திட்டம்

காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக குரல் கொடுங்கள் சரோஜா வேலைத்திட்டம் திருகோணமலை-மொரவெவ காவல்துறை பிரிவில் (18) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மொரவெவ காவல்துறை பொறுப்பதிகாரி கீர்த்தி சிங்ஹ அவர்களின் வழிகாட்டலின் கீழ் பிரதேசத்தில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் “சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக குரல் கொடுங்கள்”என எழுதப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
தற்போது சிறுவர் துஷ்பிரயோகங்கள் நாட்டில் அதிகரித்து வருவதினால் பொலிஸ் திணைக்களத்தினால் பொதுமக்களை தெளிவூட்டும் விதத்தில் நாட்டில் அனைத்து காவல்துறை நிலையங்களிலும் குறித்த வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதேபோன்று திருகோணமலை மாவட்டத்தில் அதிகளவில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ள நிலையில் அனைத்து காவல்துறை பிரிவுகளிலும் கிராமம் கிராமமாக சென்று பொது மக்களையும் சிறுவர்களின் பெற்றோர்களையும் தெளிவுபடுத்தி வருவதுடன் அவசர தொலைபேசி இலக்கங்களையும் விநியோகம் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.