மெதுவாகக் கொல்லும் விஷமாகியுள்ள உப்பு
உப்பில்லா பண்டத்தை நம்மால் ஒருபோதும் உண்ண முடியாது. அதாவது, உணவில் உப்பின் சுவை இன்றியமையாத ஒன்றாகும். ஆனால், இதை அதிகமாக உட்கொள்ளும்போது உடலுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மிதமான உப்பு நம் உடலுக்கு அவசியம். ஏனென்றால், நம் உடலில் உள்ள திரவத்தை சமநிலையில் வைத்துக் கொள்ளவும், நரம்பின் செயல்பாடு மற்றும் தசைச் சுருக்கங்களைப் பராமரிக்கவும் இது உதவுகிறது.
உப்பை ஒருவர் அதிகப்படியாக உட்கொள்ளும்போது அது நம் ஆரோக்கியத்துக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, அதிகப்படியான உப்பு உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம், எலும்பு வலுவிழப்பு, சிறுநீரகப் பிரச்னைகள் போன்றவை ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, நாம் மிதமான அளவுதான் உப்பை உட்கொள்கிறோமா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
இரத்த அழுத்தம்: உடலில் உள்ள உப்பு அளவுக்கும் இரத்த அழுத்தத்துக்கும் நேரடி தொடர்பு உண்டு. உடலில் சோடியம் அளவு அதிகமாக இருந்தால் அது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். ஏனெனில், சோடியம் நம் உடலில் தண்ணீரை அதிகம் தக்க வைத்துக் கொள்வதால் அது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.
இதய பாதிப்பு: இரத்த அழுத்தம் அதிகரித்தால் அது உடனடியாக நம் இதயத்தைத்தான் பாதிக்கும். இதனால் மாரடைப்பு, இதய செயலிழப்பு போன்றவை ஏற்படலாம்.
நீரை தக்கவைத்தல்: உப்பு அதிகம் உட்கொள்வதால் உடலில் அதிக நீர் சேர்ந்து கை, கால் போன்றவை வீங்கி விட வழிவகுக்கும்.
வயிற்றுப் புற்றுநோய்: அதிக உப்பு கொண்ட உணவுகள் வயிற்றுப் புற்று நோயை உருவாக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உப்பு அதிகம் உட்கொள்வதால், செரிமானத்தின்போது புற்றுநோய் சேர்மங்கள் உருவாகி புற்றுநோய் ஏற்படலாம் என்கின்றனர்.
அதிக தாகம்: ‘உப்பு தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்’ என்பார்கள். ஏனென்றால், உப்பு ஒரு இயற்கையான தாகம் தூண்டி. அதிகப்படியான உப்பு தாகத்தை ஏற்படுத்தி அதிகமாக திரவத்தை நாம் எடுத்துக் கொள்வதற்கு வழிவகுக்கிறது. இதனால் நம் உடலில் திரவ ஏற்றத்தாழ்வுகள் மோசமாகிறது.
இத்தகைய பல பாதிப்புகள் நாம் அதிகம் உப்பு உண்பதால் ஏற்படுகிறது. உப்பு நம் உடலுக்குத் தேவையான தாதுவாக இருந்தாலும், அதை அதிகப்படியாக எடுத்துக்கொள்ளாமல் உடல் ஆரோக்கியத்தில் நாம் கவனம் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.