ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு ; மியன்மாரில் கடை உரிமையாளருக்கு சிறை தண்டனை
மியான்மரில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்த முதலாளி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து ராணுவ தளபதி மின் ஆங் ஹலைங் தலைமையிலான ஆட்சி அங்கு நடந்து வருகிறது.
நாட்டில் பணவீக்கம் உச்சத்தில் இருக்கிறது. இந்நிலையில், செல்பொன் கடை வைத்திருக்கும் முதலாளி ஒருவர் தன்னுடைய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்ததால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இச்சம்பவம் மியான்மர் ராணுவம் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்தது மட்டுமல்லாது அவருடைய 3 செல்போன் கடைகளையும் ராணுவம் இழுத்து மூடியுள்ளது.
இந்நாட்டின் சட்ட திட்டத்தின்படி ஊதிய உயர்வு கொடுப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால், ஊதிய உயர்வு கொடுப்பதன் மூலம் பணவீக்கம் அதிகரித்து வருகிறது என மக்கள் நினைத்துக்கொள்வார்கள் என்று ராணுவம் கருதுகிறது. இது ஆட்சியை நடத்தும் தங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிடும் என்பதால் இதற்கு எதிராக கைது நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. மியான்மரில் பெரும்பாலான மக்கள் குறைந்தபட்ச ஊதியம் வாங்கவே சிரமப்படுகிறார்கள்.
இப்படி இருக்கையில் ஒரு சிலருக்கு மட்டும் ஊதிய உயர்வு கொடுப்பது சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும் என்று ராணுவம் நம்புகிறது. எனவே கைது செய்யப்பட்ட நபரின் கடையை மூடி, “சமூகத்தின் அமைதி மற்றும் ஒழுங்கை சீர்குலைத்ததற்காக இக்கடை மூடப்படுகிறது” என்கிற வாசகம் கொண்ட போர்டையும் கடைக்கு முன் வைத்திருக்கிறது. தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் முதலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
இதேபோல ஊதிய உயர்வு கொடுத்ததாக சமீப நாட்களாக பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கடந்த 2021ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை மியான்மரின் பணவீக்கம் பல மடங்கு அதிகரித்திருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.