பேரிடர் முகாமைத்துவத்துக்கு தனி அமைச்சு கோருகிறார் சஜித்!
அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள தனியானதொரு அமைச்சு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவால் இன்று இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக சென்றிருந்தவேளை ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே எதிர்க்கட்சி தலைவர் இவ்விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்ககூடிய வகையில் எமது நாட்டில் நேர்த்தியான பொறிமுறையொன்று எமது நாட்டில் இல்லை என்பது கசப்பான உண்மையாகும்.
எனவே, மீண்டுமொரு பேரிடர் ஏற்படுவதற்கு முன்னர் அனர்த்த முகாமைத்துவ பொறிமுறையை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனர்த்த முகாமைத்துவத்துக்கென தனியானதொரு நிறுவனம் – அதாவது அமைச்சொன்று உருவாக்கப்பட வேண்டும்.
அதேவேளை, சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்கு எதிரணி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.” என்றார் சஜித் பிரேமதாச.
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பாதுகாப்பு அமைச்சின்கீழ் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





