பிரான்ஸ் மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ள ரஷ்யா…
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், G20 உச்சி மாநாட்டுக்காக இந்தியா சென்றிருந்தபோது ஊடகவியளாளர்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்றுள்ளார்.அப்போது, ரஷ்ய ஊடகவியலாளர்களுக்கு மட்டும் சந்திப்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிகாரிகளின் நடவடிக்கைகள் ரஷ்ய வெறுப்பு நடவடிக்கைகள் என ரஷ்ய தரப்பு விமர்சித்துள்ளது.
ரஷ்யாவுக்கான பிரான்ஸ் நாட்டின் தூதரை அழைத்து அவரிடம் இது குறித்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்ய தரப்பு குற்றச்சாட்டுகளை பிரான்ஸ் மறுத்துள்ளது. ஊடகவியலாளர்கள் சந்திப்பு நிகழ்ந்த அறையில் இடம் போதவில்லை என்றும், ஆகவேதான், சுமார் 30 ஊடகவியலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் பிரான்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாகவே தங்கள் ஊடகவியலாளர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக ரஷ்யா பிரான்ஸ் மீது குற்றம் சாட்டி வந்துள்ளது.இதற்கிடையில், பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின்போது, அது தொடர்பில் ரஷ்ய ஊடகங்கள் போலியான தகவல்களைப் பரப்புவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.