சிங்கப்பூரில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – அரிசி வாங்கி குவிக்கும் மக்கள்
சிங்கப்பூரில் இந்திய அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரிசி ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்ததை அடுத்து சிங்கப்பூரில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
சில கடைகளில் இந்திய அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சில கடைகளில் அரிசி இருப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே போல சில கடைகளில் விலை உயர்வும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முஸ்தபா சென்டரில் நபருக்கு இரு அரிசி பாக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படுவதாக வாசகர் ஒருவர் கூறினார்.
இந்தியாவில் பெய்துவரும் கனமழை காரணமாக அரிசி விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டில் தட்டுப்பாடு நிலவும் என்ற காரணத்துக்காக இந்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.
இதன் காரணமாக சிங்கப்பூரில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் என்று சிங்கப்பூரில் உள்ள இந்திய மக்கள் பொன்னி அரிசியை வாங்கி குவிக்க தொடங்கினர்.
பிற நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு அரிசி இறக்குமதி செய்யப்பட்டாலும் இந்திய அரிசி வகைகளை மட்டுமே பெரும்பாலான இந்திய மக்கள் விரும்புகின்றமை குறிப்பிடத்தக்கது.