சீனாவில் தம்பதிகளுக்கு வழங்கப்படும் வெகுமதி!
கிழக்கு சீனாவில் மணப்பெண்ணின் வயது 25 அல்லது அதற்கு குறைவானதாக இருந்தால் தம்பதிகளுக்கு 1,000 யுவான் ($210) “வெகுமதி” வழங்குவதாக அறிவித்துள்ளது.
குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா மேற்கொள்ளும் முயற்சிகளில் இது சமீபத்திய நடவடிக்கையாகும்.
ஏற்கனவே குழந்தைகளைப் பெற்றுள்ள தம்பதிகளுக்கு குழந்தை பராமரிப்பு, கருவுறுதல் மற்றும் கல்விக்கான மானியங்களையும் சீன அரசு வழங்கியுள்ளது.
ஆறு தசாப்தங்களில் நாட்டின் மக்கள் தொகை வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து சீனாவின் பிறப்பு விகிதத்தை உயர்த்த அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.
இதன்படி கடந்த வாரம் Changshan கவுண்டியின் அதிகாரப்பூர்வ WeChat கணக்கில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், முதல் திருமணங்களுக்கு “வயதுக்கேற்ற திருமணம் மற்றும் குழந்தைப் பேறு” ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக இந்த வெகுமதி அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளகது.
சீனாவின் சட்டப்பூர்வ திருமண வயது வரம்பு ஆண்களுக்கு 22 ஆகவும், பெண்களுக்கு 20 ஆகவும் உள்ளது, ஆனால் திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன்காரணமாக பிறப்பு விகிதங்கள் குறைந்து வருகின்றன.
ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, திருமண விகிதங்கள் 2022 இல் 6.8 மில்லியனாக குறைந்த அளவை எட்டியது. 2021ஐ விட கடந்த ஆண்டு 800,000 திருமணங்கள் குறைந்துள்ளன.