சுற்றுலாப் பயணிகளுக்கு முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு விடுதல் : இலங்கை காவல்துறையின் புதிய விதிமுறைகள்

வீதி விபத்துக்களை குறைக்கும் முயற்சியில் சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு முச்சக்கர வண்டிகளை வழங்கும் நிறுவனங்களுக்கு இலங்கை காவல்துறை புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
இலங்கையில் முச்சக்கர வண்டிகளை செலுத்தும் சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்புடன், அவ்வாறான முச்சக்கர வண்டிகள் சம்பந்தப்பட்ட விபத்துக்களின் வீதமும் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவங்கள் தொடர்பிலான விசாரணையில் சுற்றுலாப் பயணிகளுக்கு முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கு தேவையான பயிற்சி அல்லது அனுமதிப்பத்திரம் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
அந்தவகையில், சுற்றுலாப்பயணிகள் முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு எடுக்கும் போது பின்வரும் மூன்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும் என இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.
செல்லுபடியாகும் இலங்கை ஓட்டுநர் உரிமம்
இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட செல்லுபடியாகும் சர்வதேச உரிமம் (இதில் முச்சக்கர வண்டி வகையும் அடங்கும்)
அந்தந்த நாட்டிலிருந்து செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்
சில முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு வழங்கும் நிறுவனங்கள் முறையான ஆவணங்கள் இல்லாமையை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதாக தெரிவித்துள்ள இலங்கை காவல்துறை, புதிய விதிமுறைகளை பின்பற்ற தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
சுற்றுலாப் பயணி ஒருவர் அத்தியாவசிய அனுமதிப்பத்திரம் இன்றி முச்சக்கரவண்டியை ஓட்டிச் செல்வது கண்டறியப்பட்டால், முச்சக்கர வண்டியின் உரிமையாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி ஒருவருக்கு முச்சக்கரவண்டியை வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும், அதற்காக ரூ. 25,000 விதிக்கப்படலாம்.
சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு முச்சக்கர வண்டிகளை வழங்கும் நிறுவனங்கள் தங்களது வாகனங்களை வாடகைக்கு விடுவதற்கு முன்னர் தேவையான செல்லுபடியாகும் உரிமங்களை சரிபார்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.