புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்பு; பாகிஸ்தான் எல்லையில் 2.26 பில்லியன் டொலரில் இந்தியா பிரம்மாண்ட திட்டம்!
பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உலகிலேயே மிகப் பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்பை இந்தியா உருவாக்கி வருகிறது.
காலநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் இறங்கியுள்ளன. இந்தச் சூழ்நிலையில் சோலார், காற்றாலை என புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்பை உருவாக்குவதில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் எல்லையில் அமைந்திருக்கும் உப்புப் பாலைவனத்தில் மிகப் பெரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்பை உருவாக்கும் பணியில் இந்தியா இறங்கியுள்ளது. இந்தத் திட்டம் அடுத்த மூன்று ஆண்டுகளில் நிறைவடையும் என்றும் உலகிலேயே மிகப் பெரிய புதுப்பிக்கத்தக்க எரி ஆற்றல் திட்டமாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
விண்வெளியில் இருந்து பார்த்தாலும், இக்கட்டமைப்பு தெரியும் அளவுக்கு மிகப் பெரியதாக கட்டமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் ரான் ஆஃப் கட்ச் பகுதியில் உள்ள காவாடா என்ற கிராமத்துக்கு அருகில் இக்கட்டமைப்பு உருவாக்கப்படுகிற நிலையில், இதற்கு காவாடா புதுப்பிக்கத்தக்க எரி ஆற்றல் பூங்கா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்ட உருவாக்கத்தில் அதானி குழுமம் முக்கிய பங்கு வகிக்கிறது.
726 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இக்கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. இது சிங்கப்பூர் அளவுக்கு பெரியதாக இருக்கும். இந்த திட்டத்தின் மொத்த செலவு 2.26 பில்லியன் டொலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டமைப்பு பணியில் 4,000 தொழிலாளர்களும், 500 பொறியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கட்டமைப்பு மூலம் ஆண்டுக்கு 30 ஜிகாவாட்ஸ் புதுப்பிக்கத்தக்க எரி ஆற்றல் விநியோகம் செய்ய முடியும். இது 1.8 கோடி வீடுகளுக்கு மின்சாரம் வழங்க போதுமானதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.