எல்லை மீறிய ரீல்ஸ் மோகம்; ஆற்றில் பெட்ரோல் ஊற்றி, நெருப்பு வைத்து குதித்த இளைஞர்!
வைகை ஆற்றில் பெட்ரோல் ஊற்றி, தீ வைத்து அதற்குள் குதித்து வீடியோ பதிவு செய்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய இளைஞர்கள் யார் என்பது தொடர்பாக தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
சமீப காலமாக சமூக வலைதளங்களின் ஆதிக்கம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆக்கிரமித்துள்ளது. ரீல்ஸ் என்ற பெயரில் குறுவீடியோக்களை தயாரிப்பதில் பலரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி விடுகின்றனர். அதே சமயம் சிலர் அதீத ஆர்வத்தோடு, ரீல்ஸ் என்ற பெயரில் ஆபத்தான காரியங்களை வீடியோக்களாக பதிவு செய்வதும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
இவ்வாறு ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுக்க முயற்சிக்கும் போது சிலர் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆற்றில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து அதற்குள் குதிப்பது போல் ரீல்ஸ் செய்து இளைஞர்கள் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது போன்ற விவரங்கள் வெளியாகாத நிலையில், இளைஞர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன.
ஆற்றுப்பகுதிக்கு செல்லும் நான்கு வாலிபர்கள் தாங்கள் கொண்டு வந்திருக்கும் பெட்ரோலை ஆற்றுக்குள் வட்டமாக ஊற்றுகின்றனர். பின்னர் அதில் தீக்குச்சியை கொளுத்தி போட, வட்ட வடிவில் தீப்பற்றி எரியத் துவங்குகிறது. அதே நேரத்தில் அருகில் உள்ள சுவற்றில் இருந்து இளைஞர் ஒருவர் எரியும் நெருப்பிற்குள் குதிக்கிறார். சிறிது நேரத்தில் தீ அணைந்து விட, அந்த இளைஞர், போர் வென்ற வீரனின் சந்தோஷத்துடன் தண்ணீரில் இருந்து வெளியேறி கரையேறுகிறார்.
இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோ, மதுரை மாவட்டம் வைகை ஆற்றில் எடுக்கப்பட்டது என கூறப்படும் நிலையில், எப்போது பதிவாக்கப்பட்டது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை. இது போன்ற செயல்களால் நீர் நிலைகளும் அதில் வாழும் மீன்களுக்கும் பாதிப்பு ஏற்படும். அதே போல் உரிய பாதுகாப்பின்றி இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. பலருக்கும் இது மோசமான முன்னுதாரணமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இதனை அறிந்து கொள்ளாமல், இந்த வீடியோவை வெளியிட்டுள்ள இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே பொலிஸார் இந்த வீடியோவை பதிவிட்ட இளைஞர்களை தீவிரமாக தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.