நாட்டை விட்டு தப்பிச் சென்ற முக்கிய நபரை கைது செய்ய சிவப்பு பிடியாணைக்கு உத்தரவு?
தரமற்ற ஆன்டிபாடி ஊசி சம்பவம் தொடர்பான வழக்கில் மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று (29) பிடியாணை பிறப்பித்துள்ளது.
குறித்த கொள்வனவு நடவடிக்கையின் மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினராக செயற்பட்ட கலாநிதி ஜயநாத் புத்பிட்டிய விசாரணைகளை தவிர்த்து வெளிநாடு சென்றுள்ளதாக அரசாங்கத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இன்று (29) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பொலிஸாரின் ஊடாக அவரை இலங்கைக்கு அழைத்து வர சிவப்பு அறிவிப்பை வெளியிடுமாறு நீதவானிடம் கோரியுள்ளார்.
இதன்படி சந்தேகநபரை கைது செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.
வழக்குத் தொடர்பாளர் மற்றும் தரப்பினர் தரப்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து உண்மைகளையும் பரிசீலித்த நீதவான், எதிர்வரும் 14 நாட்களுக்குள் இந்த வழக்கின் ஆரம்ப விசாரணைகளை முடித்துக் கொண்டு கைது செய்ய வேண்டிய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.
அந்த 14 நாட்களின் முடிவில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பான பிணை உத்தரவு அறிவிக்கப்படும் என தெரிவித்த நீதவான், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 சந்தேக நபர்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.