ரவியின் மாமியார் சுஜாதா வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக அவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களின் விவாகரத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதனிடையே ரவி மோகன் தனது நெருங்கிய நண்பராக இருந்த பாடகி கெனிஷாவை தனது வாழ்க்கைத் துணை என அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ரவி மோகனின் மாமியாரும், திரைப்பட தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வணக்கம் கடந்த 25 வருடங்களாக திரைப்படத்துறையில் ஒரு தயாரிப்பாளராக இருந்து வருகிறேன். ஒரு பெண்ணாக இத்தனை காலம் இத்துறையில் நீடித்திருப்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பது உங்களுக்குத் தெரியும். இத்தனை ஆண்டுகளில் பட வெளியீட்டின் போது அந்தப் படம் சம்பந்தமில்லாமல் வேறு எதற்காகவும் நான் மீடியா முன்பு வந்தது இல்லை. இப்பொழுது முதல்முறையாக என்னைப் பற்றி எழுந்துள்ள அவதூறுகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன்.
கடந்த சில காலமாகவே கொடுமைக்காரி, குடும்பத்தை பிரித்தவள், பணப்பேய், சொத்தை அபகரித்தவள் என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் என்னைப் பற்றி உலவி வருகின்றன, அப்பொழுதே இதற்கு விளக்கம் தர வேண்டும் என விரும்பினேன். ஆனால் என் குழந்தைகளின் எதிர்காலம் கருதி மௌனமாய் இருந்து விட்டேன். இப்பொழுதும் நான் பதில் சொல்லவில்லை என்றால் என்னைப் பற்றி திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு வரும் பொய்கள் உண்மையாகிவிடும் என்பதனால் இந்த விளக்கம்.கடந்த 2007 ஆம் ஆண்டு வீராப்பு என்ற திரைப்படத்தை முதலில் தயாரித்தேன்.
திரு சுந்தர் சி அவர்கள் கதாநாயகனாக நடித்த அப்படம் எனக்கு வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து சின்னத்திரை தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த எனக்கு, 2017 ஆம் ஆண்டு என் மாப்பிள்ளை திரு ஜெயம் ரவி அவர்கள் நீங்கள் திரைப்படமும் தயாரிக்க வேண்டும் என்ற யோசனையை வழங்கினார். அதனால் மீண்டும் திரைப்படம் தயாரிக்க துவங்கினேன்.
ஆனாலும் உறவு ரீதியாக நெருங்கிய ஒருவரை தொழில் ரீதியாக அணுகும் பொழுது அது குடும்பம் மற்றும் தொழில் இரண்டையும் பாதித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட அடங்க மறு என்ற திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றிப்படமாக அமையவில்லை. இருந்த போதிலும் தொடர்ந்து திரைப்படங்கள் தயாரிக்க வேண்டும் என்கிற ஆலோசனையை என் மாப்பிள்ளை திரு ஜெயம் ரவி அவர்கள் கூறினார். அந்த ஆலோசனையின் பெயரில் தான் நான் அடுத்தடுத்து படங்களை தயாரிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்.
இந்த காலத்தில் ஒரு திரைப்பட தயாரிப்பாளரின் பணி அந்தத் திரைப்படத்தின் துவக்கத்தின் போது கேமராக்களுக்கு முன் கை கூப்பி நிற்பதும், பட வெளியீட்டின் போது பைனான்சியர்களின் முன் கைகட்டி நிற்பது என்று ஆகிவிட்டது. இதற்கு நானும் விதிவிலக்கு அல்ல…..அடங்க மறு, பூமி மற்றும் சைரன் என மூன்று திரைப்படங்களை தொடர்ந்து என் மாப்பிள்ளை ஜெயம் ரவி அவர்களை கதாநாயகனாக வைத்து எடுத்தேன். இந்த படங்களுக்காக கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கும் மேலாக பைனான்சியர்களிடமிருந்து கடன் வாங்கி இருக்கிறேன்.
அந்தப் பணத்தில் 25 சதவிகிதத்தை திரு ஜெயம் ரவி அவர்களுக்கு ஊதியமாக வழங்கி உள்ளேன். இதற்கு என்னிடத்தில் அவருடன் செய்து கொண்ட ஒப்பந்தம், அவர் வங்கி கணக்குக்கு செலுத்திய பரிமாற்றம், அவருக்காக நான் செலுத்திய வரி என அனைத்து ஆதாரங்களும் உள்ளது. இப்பொழுது திரு ஜெயம் ரவி அவர்கள் இந்தப் படங்களின் வெளியீட்டின் போது அவரை நான் பல கோடி ரூபாய் என்னுடைய கடன்களுக்காக பொறுப்பேற்க வைத்ததாக பொய்யான ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. அவரை வெறும் கதாநாயகனாக மட்டுமே நான் பார்த்திருந்தால் கூட அப்படி நிர்பந்தப்படுத்தியிருக்க மாட்டேன்.
ஆனால் அவரை என் மாப்பிள்ளை என்பதைத் தாண்டி என் சொந்த மகனாகவே கருதினேன் அதனால் அவருக்கு எந்த ஒரு கஷ்டமும் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஒரு பெண் என்ற நிலையையும் கடந்து ஒவ்வொரு படம் வெளியிடும் போதும் விடியற்காலை ஐந்து மணி வரை வாங்கிய கடனுக்காக கிட்டத்தட்ட ஒரு வெள்ளை சுவரை தவிர பைனான்சியர்கள் நீட்டும் எல்லா இடங்களிலும் கையெழுத்து போட்டு பல கோடி ரூபாய் நஷ்டத்தையும், மன உளைச்சலையும் நான் மட்டுமே ஏற்றுக் கொண்டேன். மாறாக அவர் சொன்னது போல் அவரை நிர்பந்தப்படுத்துவதற்காக அல்ல.திரு ஜெயம் ரவி அவர்கள் சொன்னது போல் அவரை கோடிக்கணக்கான ரூபாய்க்கு நான் பொறுப்பு ஏற்க வைத்ததற்கான, வேண்டாம் ….ஒரே ஒரு ரூபாய்க்கு அவரை நான் பொறுப்பேற்க வைத்ததற்கான ஆதாரத்தை, அப்படி ஒன்று இருந்தால் அதை அவர் எங்கு வேண்டுமானாலும் வெளியிட வேண்டும் என இதன்மூலம் கேட்டுக்கொள்கிறேன்.
இன்றும் நான் மகனாகவே நினைக்கும் திரு ஜெயம் ரவி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் எப்பொழுதும் உங்களை ஒரு கதாநாயக பிம்பத்திலேயே நாங்கள் பார்க்கிறோம்,ரசிக்கிறோம். நடந்து வருகின்ற பிரச்சனையில் உங்கள் மீது அனுதாபம் ஏற்பட வேண்டும் என்பதற்காக அறிக்கைகளில் நீங்கள் சொல்கின்ற பொய்கள் அந்த கதாநாயக பிம்பத்திலிருந்து உங்களை தரம் தாழ்த்தி விடுகிறது. என்றும் நீங்கள் ஹீரோவாகவே இருக்க வேண்டும் இது வார்த்தைக்கு வார்த்தை நீங்கள் அம்மா அம்மா என்று அழைப்பீர்களே அந்த அம்மாவின் ஆசை.
இன்று வரை என் பேர குழந்தைகளுக்காக, அந்த குழந்தைகளின் சந்தோஷத்திற்காக என் மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புகிறேன். அழகாக வாழ்ந்து வந்த ஒரு மகளை வாழாவெட்டியாக பார்க்கும் துயரம் ஒரு தாயின் மனதிற்கு தான் தெரியும். அந்த துர்பாக்கியம் எந்தப் பெற்றோருக்கும் வரக்கூடாது. ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஏற்கனவே நான் அனுபவித்து வரும் வேதனைகளோடு மகளின் குடும்பத்தை பிரித்தவள், சித்திரவதை செய்த மாமியார் என்று புதிய வேதனையையும் என் மீது சுமத்தாதீர்கள். அதை தாங்கும் சக்தி என் மனதிற்கு இல்லை.