காஸா போர் நிறுத்தத்திற்கான உத்தேச திருத்தங்கள் முக்கியம் அல்ல; மூத்த ஹமாஸ் தலைவர்
காஸா போர் நிறுத்தத்திற்கு முன் மொழியப்பட்டுள்ள உத்தேசத் திருத்தங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல என்று ஹமாஸின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதில் காஸா பகுதியில் இருந்து இஸ்ரேலியப் படைகள் முழுமையாக வெளியேறுவதும் அடங்கும் என்று ஹமாஸின் மூத்த தலைவர் வியாழனன்று (மே 13) ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
ஹமாஸ் பல்வேறு மாற்றங்களைச் செய்ய கோரிக்கை விடுத்திருந்தது என்றும் அவற்றில் சில செயல்படுத்த முடியாதவை என்றும் புதன்கிழமை அன்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியிருந்தார்.ஆனால் சமரசப் பேச்சாளர்கள் இடைவெளியைக் குறைக்க முயற்சி செய்து வருவதாகவும் அவர் சொன்னார்.
இஸ்ரேல் உத்தேச திட்டத்தை ஏற்றுக் கொண்டதாக அமெரிக்கா கூறியது. ஆனால் அதனை இஸ்ரேல் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, ஹமாசை ஒழிக்காமல் இஸ்ரேல் ஓயாது என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
இதற்கிடையே இஸ்ரேலிய சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டிய 100 பேரை தேர்ந்தெடுக்கும்படி தாம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக ஹமாஸ் கூறியது.
“குறிப்பிடத்தக்க திருத்தங்கள் எதுவும் இல்லை என்று ஹமாஸ் தலைமை கூறியுள்ளதாக அந்த மூத்த ஹமாஸ் தலைவர் தெரிவித்தார்.
போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. காஸாவை மறுநிர்மாணம் செய்ய வேண்டும். எல்லைகளைத் திறக்க வேண்டும். கட்டுப்பாடுகள் இல்லாமல் பொருள்கள் எடுத்துச் செல்லப்படுவதை அனுமதிக்க வேண்டும் என்றும் அது கூறியது.
இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்த பல மாதங்களாக அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகியவை சமரசப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.இந்தப் போரில் பல ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.ஹமாஸிடம் இன்னமும் 100க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் சிக்கியுள்ளனர்.