மனித மூளையில் சிப் பொருத்தம் திட்டத்தில் முன்னேற்றம் – மகிழ்ச்சியில் மஸ்க்
நியூராலிங்க் நிறுவனத்தின் மனித மூளையில் சிப் பொருத்தும் திட்டமானது முன்னேற்றம் கண்டுள்ளதாக எலான் மஸ்க் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஸ்பேஸ் X, டெஸ்லா, X போன்ற போன்ற தலைசிறந்த நிறுவனங்களின் CEO-ஆன எலான் மஸ்க், நியூராலிங்க் எனப்படும் மனித மூளையில் சிப் பொருத்தும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் மூலமாக கை, கால்கள் செயலிழந்தவர்களின் மூளையில் சிப்பை பொருத்தி அவர்கள் எந்த சிந்திக்கிறார்களோ அதை அப்படியே கணினி மற்றும் மொபைல் வாயிலாக செயல்படுத்தும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது அந்நிறுவனம்.
தொடக்கத்தில் இவர்களது சிப்பை விலங்குகளுக்குள் பொருத்தி ஆய்வு செய்து வெற்றி கண்டனர். பின்னர் அமெரிக்க அரசாங்கம் மனிதர்களுக்குள் பொறுத்தி சோதனை செய்ய அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து நோலன் ஆர்ஃபா என்ற நபரின் மூலையில் நியூராலிங்க் நிறுவனத்தின் சிப் பொருத்தப்பட்டு வெற்றி கண்டது. இதையடுத்து அரசிடம் அனுமதி பெற்று அடுத்த கட்டத்தை நோக்கி எலான் மஸ்க் நகரத் தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து வெளிப்படையாகக் கூறியுள்ள எலான் மஸ்க், “இந்த தொழில்நுட்பம் மூலமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உடல் கட்டுப்பாட்டை முழுமையாக மீட்டெடுப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், துண்டிக்கப்பட்ட நரம்பு சிக்னல்களை இதன் மூலமாக இணைத்து அவர்களது உடல் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.”
மேலும் இந்த சிப்பை முதன்முறையாக பொருத்திக் கொண்ட நோலன் என்பவர், தனது நண்பர்களுடன் செஸ் உள்ளிட்ட விளையாட்டுகளை அவர் விளையாடியதையும் அந்நிறுவனம் பகிர்ந்தது. மேலும் இணையத்தில் தேவையானதை தேடியதாகவும், சமூக வலைதளங்களில் நேரலையில் பேசியதாகவும், கணினியை தனது சிந்தனையால் கட்டுப்படுத்தி பயன்படுத்தினார் என்றும் நியூராலிங்க் நிறுவனம் கூறியது.
இந்தத் தொழில்நுட்பத்தால் கை கால் செயலிழந்தவர்கள், பிறரது உதவியின்றி சொந்தமாக தங்களுக்கான விஷயங்களை செய்து கொள்ளலாம். இதை சாத்தியப்படுத்தி உள்ளது நியூராலிங்க் உருவாக்கிய சிப். இதன் அடுத்த கட்ட வளர்ச்சி உலகில் பல மாற்றங்களைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.